நிகழ்காலத்தில் இணையத்தை முடக்கினால், எதிர்காலத்தில் பிரளயம் வெடிக்கும் எனத் தெரியுமா முதல்வரே?!

ணையதளச் சேவை முடக்கம், துணை ராணுவத்துக்குக் கோரிக்கை, தொடர் துப்பாக்கிச் சூடுகள் என அரசு தன்னுடைய சொந்த மக்களை இரண்டாவது நாளாகத் தூங்க விடாமல் துக்கத்தில் வைத்திருக்கிறது. அடுத்து என்ன நடக்குமென்ற அச்சத்தில் இருக்கிற ஒவ்வொருவரும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். உலோகங்கள் சூழ் ஊரில் கண்ணீர் திடப் பொருளாய் மாறியிருக்கிறது. அதிகாரங்கள் கால்களை நசுக்குவதை விட மூளைகளை நசுக்குவதில் ஆர்வம் காட்டுகிறது. நாளை பற்றிய மக்களின் நம்பிக்கைகளைச் சிதைத்திருக்கிறது. அடுத்த ஐந்து நாள்களுக்கு இணையம் இல்லை என்பது ஏதோ நிகழப் போகிறது என்பதின் அறிகுறிதான்.

இணையம் முடக்கப்பட்டதாய் அறிவிப்பு வந்த பிறகு தூத்துக்குடியிலிருந்து கிடைத்த ஒரே ஒரு காணொளியும் இருக்கிற அச்சத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது. இரவில் ஏழு வயதுச் சிறுவனை அடித்து இழுத்துக்கொண்டு போகிற காவல்துறையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. காவலுக்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம்; ஏவலுக்கு எது எதையோ செய்து கொண்டிருக்கிறது. காவல் என்கிற பெயருக்கு எதைப் பொருளாய் எடுத்துக் கொள்வதென தெரியாமல் மொத்த மாநிலமும் தேங்கி நிற்கிறது.

இணையம் முடக்கம் தூத்துக்குடி

வசதி வாய்ப்புகளும், தகவல் தொடர்பு சாதனங்களும், அநீதிகளும் பெருகிவிட்ட காலகட்டத்தில் யார் பின்னே செல்வது எந்த அரசியலைப் பின்தொடர்வதெனத் தெரியாமல் இணையத் தலைமுறை குழம்பிப் போய் நிற்கிறது. உண்மையில் நம் மக்களுக்கு இது சாபம், இல்லையென்றால் கண்ணீர் தேசத்தில் இருந்துகொண்டு பூப்புனித நீராட்டு விழாவில் அமைச்சர்களும் துணை முதல்வரும் கை நனைத்திருக்கமாட்டார்கள். பத்து லட்ச ரூபாயையும், அரசு வேலையும் எரிகிற நெருப்பை அணைத்து விடுமென முதல்வர் நினைக்கிறார். பெயருக்குக் கூட தூத்துக்குடியை எட்டிப் பார்க்க வேண்டுமென்ற நினைப்பே இல்லாமல் இருப்பவரிடம் முறையிட்டுப் பெரிதாய் என்ன தீர்வு கிடைக்கப் போகிறதென நினைக்கவே தோன்றுகிறது. முதல்வரின் முகத்தை உற்றுப் பார்த்தால் இவ்வளவு சம்பவங்களுக்கும் காரணம் இவரா என்கிற அளவுக்கு ஒரு மாய முகமூடியை அணிந்திருக்கிறார்.

மருத்துவமனை வாசலில் அழுகிற ஒரு தாயின் வலியும், ஓட ஓட அடித்து விரட்டுகிற காட்சிகளும், குண்டடிப் பட்டு உயிருக்குப் போராடுகிற செய்திகளும், நிகழ்காலப் புகைப்படங்களும் இன்னும் ஐந்து நாள்களுக்கு அங்கிருந்து அவ்வளவு எளிதில் வெளி உலகத்துக்கு வரப்போவதில்லை. வெளி வர முடியாத அத்தனை துயரங்களும் ஆறாவது நாள் வெடித்துக்கொண்டு வெளியே வரும். அப்போது எல்லாமே அரசுக்குச் சுமுகமாய் நடந்து முடிந்திருக்கும். துப்பாக்கிகளையும் சில தோட்டாக்களையும் வைத்து மிரட்டுகிற அரசைச் சார்ந்து பிழைப்பது பிழைப்பே இல்லை என்ற அளவுக்கு ஆறாவது நாள் செய்திகள் இருக்கும். தூத்துக்குடி மட்டுமல்லாது பக்கத்திலிருக்கிற மற்ற மாவட்டங்களுக்கும் இணையம் தடை செய்யப்பட்டிருப்பது அடிப்படை வாழ்வாதாரத்தையே முடக்கி வைத்திருக்கும். இணையமே வாழ்க்கை என்கிற நிலைக்கு ஒரு மக்களைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டு இனி ஐந்து நாள்களுக்கு உனக்கு இல்லை என்பதெல்லாம் எந்த வரைமுறைக்குள் வரும் என்பதை அரசுதான் விளக்க வேண்டும்.

 

ஸ்டெர்லைட் நிறுவனம் தூத்துக்குடியில் கால் பதித்தது முதல் தற்போது வரை நடக்கும் நிகழ்வுகளை விளக்குகிறது இந்த வீடியோ தொகுப்பு

உலகத்தில் மக்கள் பயன்பாட்டில் இருக்கிற இணையத்தை அதிக முறை  தடை செய்திருப்பது இந்தியா என்கிறது புள்ளி விவரம். ஆனால், டிஜிட்டல் இந்தியா வளர்கிறது என்கிறார் பிரதமர். 2017 ம் வருடம் மட்டும் இந்தியாவில் 55 முறை இணையத் துண்டிப்பு நிகழ்ந்திருக்கிறது. உலகின் எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தியதில்லை, இந்தியாவைத் தவிர! 2017 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராஜஸ்தானின் சிக்கர் மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தைக் காரணமாகக் கூறி 8 முறை இணையதளம் முடக்கப்பட்டிருக்கிறது. அதே மாதத்தில் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் போலீஸ்- மக்கள் மோதலில் ஒரு முறை இணையத்தை முடக்கியிருக்கிறார்கள். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் Dera Sacha Sauda chief Gurmeet Ram Rahim Singh என்பவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டபோது பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இணையம் தடை செய்யப்பட்டிருந்தது. அதே வருடம் ஜூன் மாதம் 18 தேதியிலிருந்து பத்து நாள்களுக்கு டார்ஜிலிங் மாநிலத்தில் முழுவதுமாக இணையம் துண்டிக்கப்பட்டது. காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் கடந்த வருடம் 25 முறை இணையத்தைத் துண்டித்திருந்தார்கள். உலகத்தில் 25 முறை இணையம் துண்டிக்கப்பட்டது காஷ்மீரில்தான்.

நீங்கள் நிகழ்த்தியிருக்கும், நிகழ்த்தப்போகும் கொடூரங்களை இனி மறைக்கவோ மறக்கவோ முடியாது. இன்று நீங்கள் நிகழ்த்தும் ஒவ்வொரு சம்பவங்களையும் நீங்கள் தடுத்து வைத்திருக்கும் இணையமே மீண்டும் நினைவுபடுத்தும். அடுத்த தலைமுறை இணையத் தலைமுறை என்பதை மறந்துவிட்டு நிகழ்த்துகிற ஒவ்வொன்றும் ஒரு நாள் உங்களுக்கு எதிராகவே எழும். மறதி என்கிற நோய் முந்தைய தலைமுறையோடு முடிந்துவிட்டது என்பதை நினைத்துக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள். ஏனெனில் இணையதளத்தில் புதைக்கிற எல்லாமே இன்னொரு நாளில் விதையாக வளர்ந்து நிற்கும்.

ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது “இருட்டு எல்லோருக்கும் இருட்டாக இருக்கிறது! வெளிச்சம்தான் எல்லோருக்கும் வெளிச்சமாக இருப்பதில்லை”.