மாணவர்களுக்கு தொல்லை கொடுக்கும் ஆசிரியர்கள்: மைத்திரி

ஆசிரியர்களால் பாடசாலை மாணவர்களுக்கு கொடுக்கப்படும் தொல்லைகள் மற்றும் அநீதி தொடர்பான பல தகவல்கள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிங்கிரிய வடமேல் தேசிய கல்வியற் கல்லூரியில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

தனக்கு கிடைத்துள்ள கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள் மற்றும் சில கலந்துரையாடல்களில் இந்த தகவல்கள் கிடைத்துள்ளது.

அத்துடன், இந்த சீரற்ற நிலைமை குறித்து அதிகாரிகள் துரிதமாக கவனம் செலுத்த வேண்டும். தற்போது ஆசிரியர் சேவையில் இரண்டு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களில் 8 – 9 வீதமானவர்கள் தொழில் தகுதியற்றவர்கள் என நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

மேலும், இது கல்வி தகுதிக்கு அமைய நடைபெறுவதில்லை. சேவைக்கு வழங்கப்படும் கௌரவம், அர்ப்பணிப்பு மற்றும் திறமைகள் தொடர்பாக காட்டப்படும் பலவீனத்தன்மை இதற்கு காரணம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.