பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனைச் சேவையினை வழங்கவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தேசிய நீதி வாரத்தை முன்னிட்டே மேற்படி சேவை வழங்கப்படவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி யு.ஆர்.டி.சில்வா தெரிவித்தார்.
தேசிய நீதி வாரமானது மே மாதம் 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அச்சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய நீதி வாரத்திலே இலங்கை சட்டத்தரணிகள் சங்கமானது நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது. அதன்படி நீதி முறைமை மற்றும் சட்டதிட்டங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அத்தோடு விசேடமாக கொழும்பை மையமாகக் கொண்டு நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட சில பிரதேசங்களில் இலவச சட்ட ஆலோசனைச்சேவை வழங்கப்படவுள்ளது.
தேசிய நீதி வாரத்தின் இறுதி இரண்டு நாட்களான 26, 27 ஆம் திகதிகளில் ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டை மாநகர சபை மைதானத்தில் காலை 9 மணி முதல் பொதுமக்களுக்கான இலவச சட்ட ஆலோசனைச்சேவை முன்னெடுக்கப்படும். அத்தோடு மாத்தளை, யாழ்ப்பாணம், காலி, மாத்தறை, அநுராதபுரம், மட்டக்களப்பு, குருணாகலை, வவுனியா மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களிலும் இலவச சட்ட ஆலோசனைச்சேவையினைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த சேவையினைப் பெறும் மக்கள் தமது சந்தேகங்களைத் தெரியப்படுத்துவதற்கு மே மாதம் 7 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையில் விசேட தொலைபேசி இலக்கம் வழங்கப்பட்டுள்ளது. 0113133872 எனும் விசேட தொலைபேசி இலக்கத்தின் மூலம் தொடர்புகொண்டு பொதுமக்கள் சட்டம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
விசேடமாக சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் பிணை மற்றும் விடுதலை தொடர்பிலான சட்ட ஆலோசனைகளை அவர்களது உறவினர்கள் பெற்றுக்கொள்ள முடியும். சிறைச்சாலைக் கைதிகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தியுள்ளோம் எனவும் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் மேலும் தெரிவித்தார்.
அத்தோடு சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் பிரதானமாக பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அரச ஊழியர்களை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படவுள்ளதோடு, பொதுமக்களுக்கான விழிப்புணர்வு பிரசாரங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.
தேசிய நீதி வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படவுள்ள இச்செயற்றிட்டத்தில் நீதி அமைச்சு, கல்வி அமைச்சு, நீதி சேவைகள் ஆணைக்குழு, நீதிபதி திணைக்களம் மற்றும் சில அரசு சாரா அமைப்புக்கள் என்பன ஒன்றிணைந்து செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






