ஆதிக்கத்தின் கரம் எங்கெல்லாம் அத்துமீறி செயல்படுகிறதோ அங்கெல்லாம் புரட்சிகளும் – புரட்சியாளர்களும் பிறப்பெடுப்பார்கள் என்பார்கள். ஆம், அப்படியானதோர் புரட்சியை முன்னெடுத்த தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களுக்கு எந்நாளும் உலகை குலுக்கிய தலைவர்கள் வரிசையில் முதன்மையான இடமிருக்கும் என விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்கள் உடனான தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக அரசியல் இயக்கம் கண்டாலும், தமிழ்த்தேசிய ஆதரவு நிலைப்பாட்டினை துவக்கம் முதலே மேற்கொண்டுள்ளவராக அறியப்படுபவர் திருமாவளவன் அவர்கள். மாணவப்பருவத்திலேயே பிரபாகரன் அவர்களால் ஈர்க்கப்பட்ட காரணத்தினாலேயே தமது அமைப்புக்கு விடுதலைச் சிறுத்தைகள் என பெயர் சூட்டியதாக சிவகாசியை அடுத்துள்ள திருத்தங்கல்லில் நடந்த மே 17 – தமிழீழ முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார் திருமாவளவன்.
நிகழ்வில் பேசிய அவர், “கடந்த 2002 ஆம் ஆண்டில் மானுடத்தின் தமிழ்கூடல் மாநாட்டிற்காக ஈழம் சென்று உரையாற்றியதும், தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் உடனிருந்ததும் எந்நாளும் என் நெஞ்சில் பசுமையாக ஈர்க்கக்கூடிய நிகழ்வுகள். நான் ஈழம் சென்ற இரு முறைகளும் பிரபாகரன் அவர்களையும், அவரது நெஞ்சுறுதியையும் கண்டு வியந்திருக்கிறேன்” என தெரிவித்தார்.
மேலும், “இனம், மதம், மொழி மற்றைய எதன் பெயராலும் ஆதிக்கம் எங்கும் நிகழ்த்தப்பட கூடாது, அப்படி நிகழுமேயானால் அங்கு புரட்சி உருவாகும் ; புரட்சியாளர்களும் உருவாவார்கள். அப்படியான, புரட்சியாளர்களில் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு எந்நாளும் தனித்த இடம் இருக்கும்” என நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.






