கொழும்பில் ஆட்சியில் உள்ள அரசில் ஏற்பட்டுள்ள குழப்பம் அல்லது அரசியலின் நிலையற்ற தன்மை அடுத்த அரச தலைவர் யார் என்பது குறித்த தேடலைப் பெருமெடுப்பில் உருவாக்கியிருப்பது பட்டவர்த்தனமாகத் தெரிகின்றது.
அடுத்ததாக மாகாண சபைத் தேர்தலே வரவுள்ளது (அது நடக்குமா நடக்காதா என்கிற சந்தேகங்கள் இருந்தாலும் சட்டப்படி அடுத்த தேர்தல் அதுதான்).
ஆனால் மாகாண சபைத் தேர்தல் மீதான கவனத்தைவிட 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வரவுள்ள அரச தலைவர் தேர்தலைக் குறிவைத்த நகர்வுகள் கொழும்பில் மும்முரமாகியிருக்கின்றன.
அடுத்த அரச தலைவர் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவர் இல்லை என்கிற திடமான முடிவை நோக்கி ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் நகர்ந்து வருகின்றன.
பொது வேட்பாளர் ஒருவர் இல்லையென்றால் இந்த இரு கட்சிகளினதும் சார்பில் உள்ள மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இரு முகங்களுமே கவர்ச்சிகரமானவை அல்ல.
இந்த இரு முகங்களும் இணைந்தபோது கிடைத்த ஒளி வெள்ளம், கவர்ச்சி மெல்லமெல்ல மங்கி மூன்று ஆண்டுகளுக்கு இடையிலேயே காணாமற் போய்விட்டது.
கூட்டணி ஆட்சிகளில் இத்தகைய இழுபறிகளும் பின்னிழுப்புகளும் நிகழ்வது வழமைதான் என்றாலும் இந்தக் கூட்டாட்சியிலே அவை மோசமான அளவில் பெருத்து உருப்படியான, அவசியமான விடயங்கள் பலவும் நடக்காமல் ஆக்கிவிட்டன.
அல்லது மிக மிக மெதுவாக ஒவ்வொன்றும் நடக்கின்றன. குறிப்பாக லஞ்ச, ஊழல் அரசியல் ஆட்சியில் இருந்து நாட்டை மீட்டெடுத்துப் பொருளாதார அபிவிருத்தியில் முன்னகர்த்துவார்கள் என்கிற எதிர்பார்ப்பு பொய்த்துப்போய்விட்டது.
இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பார்கள் என்கிற எதிர்பார்ப்பும் பொய்த்துப் போய்விட்டது.
இவ்வாறு மக்கள் எதிர்பார்த்த பெரும் மாற்றங்களை உருவாக்கக்கூடிய பெரு வெற்றிகளை இந்த அரசு பெறத் தவறியதன் விளை வாக, உறுதியான, செயற்றிறன் உள்ள ஒரு தலைவரும் ஆட்சியும் தேவை என்கிற மனோ நிலையை நோக்கி மக்கள், குறிப்பாகச் சிங்கள மக்கள் நகர்வதைக் காணமுடிகின்றது.
அவர்களின் இந்தத் தேடலுக்கான முகமாக கூட்டு எதிரணி கோத்தபாய ராஜபக்சவைக் களமிறக்கும் தயார்ப்படுத்தல்களை ஆரம்பித்துவிட்டது.
30 வருடங்களாக நீடித்த போரை உறுதியான தலைமைத்துவத்தின் மூலம் முடித்து வைத்த ஆளுமை என்கிற விம்பம் கோத்தபாயவின் மீது ஆணித்தரமாக விழுந்திருக்கிறது.
அதனை மூலதனமாக்கி கோத்தபாயவை அரச தலைவருக்கான போட்டிக் களத்தில் இறக்கிவிடும் வியூகமே இது. அதற்கான முன்னேற்பா டாகவே சீன (கொங்கொங்) பல்தேசிய நிறுவனமான ஷங்கரில்லா உயர் நட்சத்திர விடுதியில் சுமார் 2 ஆயிரம் பேரைத் திரட்டி ‘அறிவியல் மிகுந்த இலங்கை’ என்ற தொனிப் பொருளில் அவர் உரையாற்றினார்.
அந்த உரையிலே பொருளாதார வளர்ச்சியால்தான் இலங்கையை வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல முடியும் என்கிற கருத்தைத்தான் அவர் முக்கியமாகக் கூறியிருக்கின்றார். கோத்தபாயவின் இந்தக் கருத்துப் புதியதல்ல.
அவரது மூத்த சகோதரனான மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், போருக்குப் பின்னரான காலத்திலும் இதே கொள்கைதான் முன்னெடுக்கப்பட்டது.
பொருளாதாரத்தை உயர்த்துவதன் மூலம் தமிழர்களின் உரிமைப் பிரச்சினையையும் முடிவுக்குக்கொண்டு வந்துவிடலாம் என்ற கொள்கையே முன்வைக்கப்பட்டது.
பல நேர்காணல்களிலேயே வடக்கு கிழக்கில் இருப்பது பொருளாதாரப் பிரச்சினையே தவிர இனப் பிரச்சினை இல்லை என்று கோத்தபாய ராஜபக்ச அழுத்திக் கூறி வந்திருக்கிறார்.
அவர் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் அதே கொள்கையின் அடிப்படையிலேயே ஆட்சி அமையும் என்பதையே அவரது ஷங்கரில்லா உரை தெளிவுபடுத்துகின்றது.
தமிழர்கள் மத்தியில் இந்தக் கொள்கை எவ்வளவு தூரம் எடுபடும் என்பது கேள்விக்குரியதே! போருக்குப் பின்னர் வடக்கின் பௌதிக அபிவிருத்தியில் மகிந்த அரசு பெருமளவில் முதலிட்ட போதும் அதனைத் தமிழ் மக்கள் ஒரு பொருட்டாகக் கருதினார்கள் இல்லை என்பது வரலாறு.
ஆனாலும் கோத்தபாய ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை அவர் அழுத்தமாகச் சொல்லிச் சென்றிருக்கும் இன்றைய நிலையில் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிச் செல்வதாக என்பதையே தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.






