கொழும்பு நோக்கி சென்ற பேருந்தில் பயணிகளின் இடங்களை பிடித்த முருங்கைக்காய் மூட்டைகள்

இலங்கை அரச போக்குவரத்து சேவையின் மன்னார் சாலையிலிருந்து நேற்று இரவு கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்தின் பயணிகள் ஆசனங்களில் அதிகளவான முருங்கைக்காய் மூட்டைகள் ஏற்றிச் செல்லப்பட்டதால் பயணிகள் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பயணிகள் கூறுகையில்,

தலைமன்னாரில் இருந்து பயணிகளை ஏற்றி வரும் இலங்கை அரச போக்குவரத்து சேவையின் மன்னார் சாலைக்கான பேருந்து, மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இரவு 9.30 மணிக்கு கொழும்பு நோக்கி செல்வது வழமை.

இந்த நிலையில் நேற்று இரவு தலைமன்னாரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வரும் வழியில் உள்ள கிராமங்களில் ஒரு தொகை முருங்கைக்காய் மூட்டைகளையும் ஏற்றிக்கொண்டு மன்னார் சாலை நோக்கி குறித்த பேருந்து வந்துள்ளது.

பேருந்தின் பின் கதவு முழுமையாக மூடப்பட்டு, ஆசனங்கள் உட்பட பின் பகுதியில் அதிகளவான முருங்கைக்காய் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

மேலும் முன் கதவிற்கும், சாரதியின் ஆசனத்திற்கும் இடையிலும் ஒரு தொகுதி முருங்கைக்காய் மூட்டைகள் ஏற்றப்பட்டிருந்தன.

இதனால் அந்த பேருந்தில் ஆசன பதிவுகளை மேற்கொண்ட தூர இடங்களுக்குச் செல்லும் பயணிகள் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.