மே 1′ கூட்டங்களுக்கு பொலிஸ் தடை இல்லை!

மே முதலாம் திகதி தொழிலாளர் தினக் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது சட்டரீதியாகத் தடைசெய்யப்படாத நிலையில், அன்று நடைபெறும் கூட்டங்களுக்கு பொலிஸாரால் எந்தவித இடையூறுகளும் ஏற்படுத்தப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும், மே மாதம் முதலாம் திகதி வெசாக் தின நிகழ்வுகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், வீதிகளில் போக்குவரத்துத் தடை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பௌத்தர்களின் புனித நாளும் மே தினமும் ஒரே நாளில் வருவதால் மே தின நிகழ்வுகளை எதிர்வரும் 7ஆம் திகதிக்கு மாற்றுமாறு அரசிடம் மகாநாயக்க தேரர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய 7ஆம் திகதி மே தினக் கொண்டாட்டங்களை நடத்துவது என்று அரச தரப்பினர் முடிவெடுத்தனர். எனினும், சில கட்சிகளின் மே தின நிகழ்வுகள் மே முதலாம் திகதியே நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.