ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற நிகழ்வு ஒன்றில் மர்மமான முறையில் நபர் ஒருவர் செயற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜனாதிபதி தலைமையில் பிங்கிரிய, தேவகிரிய விகாரையில் நடைபெற்ற வெசாக் நிகழ்வில் சந்தேகத்திற்குரிய முறையில் நடந்து கொண்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியாகியிருந்தது.
கடந்த 28ஆம் திகதி மாலை ஜனாதிபதி பாதுகாப்பு அதிகாரிகளினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டு பிங்கிரிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
ஜனாதிபதி சென்ற இந்த நிகழ்விற்கு வந்தவர்களில் சந்தேகத்திற்கிடமான முறையில் செயற்பட்ட இந்த நபரை, அரசாங்க புலனாய்வு சேவை பொலிஸ் அதிகாரி ஒருவர் கண்காணித்துள்ளார்.
அதற்கமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கொழும்பு, மாளிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 57 வயதான ஒருவராகும்.
குறித்த நபர் தொடர்பில் ஆராய்ந்த போது, கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதியின் தலைமையில் இடம்பற்ற நிகழ்வில் கத்தரிக்கோலை மறைத்து உள்ளே நுழைய முயற்சித்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டவர் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் என்ன காரணத்திற்காக கொழும்பில் இருந்து பிங்கிரியவுக்கு சென்றார் என்பது இன்னமும் தெரியவில்லை. அவரிடம் பிங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.






