விக்னேஸ்வரனின் முதல் சவால்!! – கே. சஞ்சயன் (கட்டுரை)

வடக்கு மாகாணசபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், போட்டியிடத் தமக்கு அழைப்பு வராது என்றும், எனவே புதிய கட்சி ஒன்றை உருவாக்கி  அல்லது  கூட்டணி  ஒன்றை  உருவாக்கிப் போட்டியிடும்  வாய்ப்புகள்  இருப்பதாகவும், அறிக்கை ஒன்றை வெளியிட்டு விட்டு, இந்தியாவுக்குச் சென்றிருந்தார் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்.

இந்த அறிவிப்புக்காக, பல மாதங்களாக காத்திருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், தமக்குள் சண்டையை ஆரம்பித்து விட்டன.

முதலமைச்சரின் அறிக்கை வெளியானதும், கருத்து வெளியிட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், “முதலமைச்சர் அமைக்கும் கூட்டணியின் செயற்பாடுகளைப் பொறுத்து, அதனுடன் இணைந்து செயற்படத் தயார்” என்று கூறியிருந்தார்.

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில், தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் சில கட்சிகளுடன் இணைந்து உருவாக்கிய கூட்டணி, உள்ளூராட்சித் தேர்தலில் சோபிக்காது போனதை அடுத்து, ஈ.பி.ஆர்.எல்.எப், இன்னும் வலுவான அணியொன்றைத் தேடிக் கொண்டிருப்பதில் ஆச்சரியமில்லை.

உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான அணி இதுவே என்றும், இதன், உதயசூரியன் சின்னத்திலேயே முதலமைச்சர் விக்னேஸ்வரன், வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் கூறித்திரிந்த ஈ.பி.ஆர்.எல்.எப், இப்போது, அந்தக் கூட்டணி தற்காலிகமானது என்று நழுவத் தொடங்கியிருக்கிறது.

ஈ.பி.ஆர்.எல்.எப் ஐ பொறுத்தவரையில், பலமான ஒரு கூட்டணியில் இருந்தால்தான், தமது பிரதிநிதித்துவத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற நிலையில் இருக்கிறது.

எனவே, முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கூட்டணியில் இணைவதற்குக் கொள்கை ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ அவர்களுக்கு எந்தத் தடைகளும் இருக்காது.

625.500.560.350.160.300.053.800.900.160.90 விக்னேஸ்வரனின் முதல் சவால் - கே. சஞ்சயன் விக்னேஸ்வரனின் முதல் சவால்!!  - கே. சஞ்சயன் (கட்டுரை) 625ஆனால், சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் ஐத் தமது கூட்டணியில் சேர்த்துக் கொள்வது, முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அவ்வளவு இலகுவான விடயமாக இருக்கும் போலத் தெரியவில்லை. அதற்குக் காரணம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

முதலமைச்சர் விக்னேஸ்வரன், தம்முடன் தான் இணைந்து கொள்ள வேண்டும் என்று, பிரச்சினையைக் கிளப்பியிருக்கிறது அந்த அணி.

யாழ்ப்பாணத்தில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியிட்ட கருத்துகளும் சரி, அதற்கு முன்னர், இலண்டனில் நடந்த கலந்துரையாடல் ஒன்றில் அவர் வெளியிட்ட கருத்துகளும் சரி, ஈ.பி.ஆர்.எல்.எப் ஐக் கடுமையாகச் சீண்டுவதாக அமைந்திருந்தது.

உள்ளூராட்சித் தேர்தலில், தம்முடன் கூட்டணி அமைக்க வருவதாகக் கடைசி வரை கூறிவிட்டு, காலை வாரிக் கொண்டு போன, கொள்கையில்லாத கட்சி என்று கஜேந்திரகுமார், விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

உள்ளூராட்சித் தேர்தல் முடிந்து இரண்டரை மாதங்களாகியும், தேர்தலுக்கு முந்திய கூட்டணியால் ஏற்பட்ட பிரச்சினைகள், இரண்டு கட்சிகளுக்கிடையில் தொடர்கின்றன.

முதலமைச்சர் அமைக்கப்போகும் கூட்டணியில், ஈ.பி.ஆர்.எல். எப் ஐச் சேர்க்கக்கூடாது என்பதை, ஆரம்பத்திலேயே ஆணித்தரமாக வலியுறுத்த ஆரம்பித்துள்ளது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

இந்தக் கட்டத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன், சங்கடமான நிலை ஒன்றைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்படக் கூடும்.

அதாவது அவர், கொள்கை அரசியல், நிறுவனமயப்படுத்தப்பட்ட அரசியல் பற்றிப் பேசியிருந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான- வலுவான அணி ஒன்றை உருவாக்குவது, அவரது முக்கியமானதும் முதன்மையானதுமான தேவையாக இருக்கிறது.

பரந்துபட்ட அரசியல் கூட்டணியை உருவாக்கும் போது, அதில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஐ இணைத்துக் கொள்வது, முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்குக் கடினமான முடிவாக இருக்காது.

ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, அதற்கு இடம்கொடுக்காது என்பதை கஜேந்திரகுமாரின் கருத்து உணர்த்தியிருக்கிறது.

இந்த இரண்டு தரப்புகளையும் இணைத்துக் கொண்டு பயணிப்பது, முதலமைச்சரின் திட்டமாக இருந்திருக்கக் கூடும். ஏனென்றால், யாழ்ப்பாண மாவட்டத்தில்தான், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கோ, முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கோ ஒரு தளம் இருக்கிறது.

அதற்கு அப்பால் வன்னிப் பிரதேசத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப்க்குப் பெரியளவில் இல்லையென்றாலும், ஓரளவுக்கு தளம் இருக்கிறது. அதையும் இணைத்துக் கொள்வதன் மூலமே, வடக்கின் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்று முதலமைச்சர், கணக்குப் போட்டிருக்கக் கூடும்.

ஆனால், ஈ.பி.ஆர்.எல்.எப்க்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் காணப்படும் அரசியல் மோதல்கள், இப்போது கொள்கை சார் மோதலாக உருவகப்படுத்தப்படும் நிலையில், முதலமைச்சர் விக்னேஸ்வரன், சிக்கலை எதிர்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்.

தமது காலை வாரிய கட்சியை, முதலமைச்சர், தனது கூட்டணியில் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்பதில், கஜேந்திரகுமார் தரப்பு உறுதியாக இருக்கிறது.

தமிழ் மக்கள் பேரவையில் ஒன்றாகப் பணியாற்றிய இந்த இரண்டு தரப்புகளுக்கும் இடையிலான உள்மோதல்களை, முதலமைச்சர் எவ்வாறு கையாளப் போகிறார் என்பதைப் பொறுத்தே, அவரது கூட்டணி எந்தளவுக்குப் பலம் வாய்ந்ததாக இருக்கும் என்பதை, உறுதி செய்து கொள்ள முடியும்.

அதுமாத்திரமன்றி, தம்முடனும், தமிழ் மக்கள் பேரவையில் உள்ள பொது அமைப்புகள் மற்றும் அதற்கு வெளியில் உள்ள சில அமைப்புகளுடன் மாத்திரமே, முதலமைச்சர் விக்னேஸ்வரன் இணைந்து செயற்பட வேண்டும் என்று, நிபந்தனை விதிக்கும் தொனியில் கஜேந்திரகுமார் கருத்து வெளியிட்டிருக்கிறார்.

இது ஒரு வகை நிபந்தனை அல்லது பேரமாகத் தென்படுகிறது. இவ்வாறு, அதிகாரத்தொனியில் பேரம் பேச முற்படும் தரப்புகளை, முதலமைச்சர் விக்னேஸ்வரன் எவ்வாறு கையாளப்போகிறார் என்பதும் கேள்விக்குரியதாகவே இருக்கிறது.

ஈ.பி.ஆர்.எல்.எப் மீது, கஜேந்திரகுமார் முன்வைத்த குற்றச்சாட்டுகள், அந்தக் கட்சிக்குக் கடும் சினத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அதனால் தான், கஜேந்திரகுமாருக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலான நீண்ட அறிக்கை ஒன்றை, ஈ.பி.ஆர்.எல்.எப் செயலாளர், சிவசக்தி ஆனந்தன் மூலம் வெளியிடச் செய்திருக்கிறார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

விரைவிலேயே அரசியல் பேரங்களுக்கான வாய்ப்புகளும், விட்டுக்கொடுப்புகளுக்கான சூழல்களும் ஏற்படலாம் என்பதால், சிவசக்தி ஆனந்தனைக் கொண்டு பதிலடி கொடுத்திருக்கிறார் சுரேஷ் பிரேமச்சந்திரன். பொதுவாக, அரசியல் கட்சிகள் இவ்வாறு நடந்து கொள்வது வழக்கம்தான்.

தமிழரசுக் கட்சி மீது, முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு, இரா.சம்பந்தன் நேரடியாகப் பதிலளிக்காமல், கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கத்தைக் கொண்டு பதிலளித்திருந்தார்.

index விக்னேஸ்வரனின் முதல் சவால் - கே. சஞ்சயன் விக்னேஸ்வரனின் முதல் சவால்!!  - கே. சஞ்சயன் (கட்டுரை) index6 e1525004734974சிவசக்தி ஆனந்தனின் அறிக்கையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மீது குற்றச்சாட்டுகள் பல முன்வைக்கப்பட்டிருந்தன.

‘சட்டத்தரணிகள் நிறைந்த தமிழ் காங்கிரஸால் ஒரு பொதுச் சின்னத்தைக் கூடப் பெறமுடியாது போனதால் தான், தாங்கள் தற்காலிமாக ஒரு கூட்டணியை அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஈ.பி.ஆர்.எல்.எப் ஐத் தேச விரோதிகளாகக் காட்டுவதற்கு, தமிழ்க் காங்கிரஸ் முற்படுவதாகவும் அந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஜெனிவாவில் விடுதலைப் புலிகளைப் பற்றி கொச்சைப்படுத்தும் கருத்துகளை வெளியிட்ட கஜேந்திரகுமாரின் கொள்கையை, கேள்விக்குட்படுத்தியுள்ள இந்த அறிக்கையில், ஆயுதப் போராட்ட காலத்தில் உங்களது பங்களிப்பு, எந்தளவுக்கு இருந்தது என்பதை, மக்களுக்குத் தெளிவுபடுத்துமாறும் கோரப்பட்டிருந்தது.

13ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்று மாகாணசபைத் தேர்தல்களை புறக்கணித்து விட்டு, இப்போது போட்டியிட முன்வந்திருப்பது, கொள்கைத் தவறு என்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்றுக்கொள்கிறதா என்றும், கேள்வி எழுப்பியிருக்கிறார் சிவசக்தி ஆனந்தன்.

இன்னும் பல விடயங்களை நாங்கள் குறிப்பிட வேண்டியிருந்தாலும்கூட, மக்கள் நலன்களுக்கான எதிர்கால அரசியல் செயற்பாடுகளைக் கருத்திற்கொண்டு, மேற்கண்ட விடயங்களுடன் நிறுத்திக் கொள்கிறோம் என்றும் தனது அறிக்கையில் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டிருந்தார்.

ஆக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக, சுமத்தக்கூடிய பல குற்றச்சாட்டுகள் இன்னமும் உள்ளன என்பதை, அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்த ஊடக அறிக்கைப் போர், ஒரு காலத்தில் நெருக்கமாக இருந்த இரண்டு கட்சிகளையும் விலகி நிற்க வைத்திருக்கிறது.

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய முதலமைச்சர், புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த அக்கப்போருக்கு முதலில் முடிவுகட்ட வேண்டிய சிக்கல் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

ஏனென்றால், இந்த அக்கப்போரால் பாதிக்கப்படப் போவது அவர்தான்.

இந்தப் பிரச்சினையை அவர் சுமுகமாக தீர்த்துக் கொண்டாலும், இரண்டு கட்சிகளும் வெளியிட்டிருக்கின்ற கருத்துகள் திருப்பப் பெறப்பட முடியாதவை. அது முதலமைச்சரின் கொள்கை சார் கூட்டணிக்கும் சவாலானதாகவே இருக்கும்.

– கே. சஞ்சயன்