நாங்குநேரி, நாங்குநேரி அருகே கணவர்- மனைவி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவான கொலையாளி தூத்துக்குடியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அங்கு முகாமிட்டுள்ள தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள வாகைகுளத்தை அடுத்துள்ள பட்டர்புரத்தை சேர்ந்தவர் செல்லையா (வயது 60). விவசாயி.
அவருடைய மனைவி பேச்சித்தாய் (55). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ஆறுமுகநயினார் என்ற ஆறுமுகராஜ். இரு குடும்பத்தினர் இடையே நிலப்பிரச்சினை மற்றும் வீட்டின் முன்பு கழிவுநீர் செல்வதில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்தநிலையில் சம்பவத்தன்று இரவில் ஆறுமுகராஜ் அரிவாளால் செல்லையா மற்றும் பேச்சித்தாய் ஆகியோரை வெட்டிக்கொலை செய்தார்.
அவர்களுடைய மகள் செண்டுவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. அவருக்கு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இருவருடைய உடல்களும் பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் தூத்துக்குடிக்கு விரைந்தனர்
இந்த நிலையில், ஆறுமுகராஜ் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் தலைமறைவாகி விட்டார். நேற்றுமுன்தினம் அவரது வீட்டை சிலர் கல்வீசி தாக்கினர்.
இதில் வீடு சேதமடைந்தது. ஆறுமுகராஜை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில்,‘ தேடப்பட்டு வரும் ஆறுமுகராஜின் சொந்த ஊர் தூத்துக்குடி. எனவே, அவர் தூத்துக்குடியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் தனிப்படை போலீசார் அவரை தேடி தூத்துக்குடிக்கு விரைந்தனர். அங்கு தனிப்படையினர் முகாமிட்டு அவரை தேடிவருகின்றனர்.







