புலிகளின் சீருடையை பிரபாகரன் சீமானுக்கு அணிய அனுமதிக்கவில்லை!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இல்லை என நினைத்துக்கொண்டு புலிகளின் சின்னத்தைத் தனது கொடியில் வைத்துக்கொண்டுள்ளார் சீமான் என வைக்கோ இந்திய ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அவர் அப்பேட்டியில் சீமான் குறித்து மேலும் தெரிவிக்கையில்,

சீமான், பிரபாகரனுடன் தான் பலநாள்கள் இருந்ததாகவும், வேட்டைக்குச் சென்றதாகவும், ஆமைக்கறி சாப்பிட்டதாகவும் பொய் சொன்னார்.

இவரை வெறும் எட்டு நிமிடம்தான் பார்க்க அனுமதித்தார் பிரபாகரன். புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை. ‘புலிகள் சீருடை அணிந்து உங்களுடன் போட்டோ எடுத்துக்கொள்ளலாமா?’ என்று சீமான் கேட்டதற்கு மறுத்துவிட்டார் பிரபாகரன்.

பிரபாகரனுடன் போட்டோ எடுத்ததுபோல கிராஃபிக்ஸ் செய்துகொண்டார்.

நான் புலிகள் சீருடையில், ஒரு மாதம் அந்தக் காட்டில் பிரபாகரனுடன் இருந்தவன், பிரபாகரனிடம் ராணுவப் பயிற்சி பெற்றவன். நூலிழையில் உயிர்பிழைத்து வந்தவன் நான். இதையெல்லாம் நான் விளம்பரம் செய்யவில்லை.” ஆனால் சீமான் கொடியில் புலிகள் சின்னத்தை வைத்து விளம்பரம் செய்கிறார்.

“எட்டு ஆண்டுகளாகவே நான் பொறுமையாக இருக்கிறேன். தமிழன் இல்லை, தெலுங்கன் என்று என்னைச் சீமான் கீழ்த்தரமாகப் பேசுவதோடு, ‘ஈரோடு ராமசாமி நாயக்கன்’ என்று பெரியாரை எல்லா மேடைகளிலும் பேசினார்.

இந்த அண்ணாதுரை என்ற முட்டாள், தமிழ்நாட்டைக் கெடுத்துவிட்டான்…’ என்று தொடக்க காலத்தில் பேசினார். அண்ணாவையும், பெரியாரையும் இப்படி ஏசுகிறாரே என்று சகித்துக்கொண்டே இருந்தேன்.

பின்னர் நண்பர்கள் சொன்னார்கள், ‘பெரியாரைத் தாக்குவது உங்களை காலி பண்ணுவதற்காகத்தான்’ என்று. இதைப் பற்றி நான் வெளியில் பேசுவதில்லை.

நான் மதுரையிலிருந்து புறப்படும்போது புலி, வில், கயல் கொடி பிடித்து நடந்துவந்ததைப் பார்த்து, மறுநாளே தனது முகநூலில் அதே போல் கலர் மாற்றிப் போட்டுக்கொண்டார் சீமான்.