ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமா… வீட்டிலேயே ஷாம்பு….!

வசிகரிக்கும் அடர்த்தியான, ஆரோக்கியமான நீள கூந்தல் வேண்டும் என்பதே பெண்களின் ஆசை. ஆனால், அந்தத் தேடலுக்கான விடை, நாம் தொலைக்காட்சியில் பார்க்கும் விளம்பரங்களிலோ, சூப்பர் மார்கெட் ரேக்கர்ளிலோ கிடைப்பதாக நம்புவது சரியல்ல. அதனால், கூந்தல் தொடர்பான சிக்கலை அதிகரிக்கவே செய்யும். அப்படியானால், அலைபாயும் அழகான கூந்தலுக்கு என்னதான் வழி? கூந்தலுக்கான ஷாம்பூ எப்படி இருக்க வேண்டும்?

“ஷாம்புவைப் பயன்படுத்தும்போது, நான்ஸ்கால்ப் சம்பந்தப்பட்ட பிரச்னைக்குப் பயன்படுத்துகிறோமா, கூந்தல் சம்பந்தப்பட்ட பிரச்னைக்குப் பயன்படுத்துகிறோமா என்ற தெளிவு வேண்டும். ஸ்கால்ப்புக்கான பிரச்னைகள் என்பது, பொடுகு, கூந்தல் வலிமை இல்லாததுபோன்றவை. கூந்தல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் எனில், வறண்ட கூந்தல், முடிப்பிளவு, செம்பட்டை அடைதல் போன்றவை. இவற்றை மனதில்கொண்டு நமக்கான ஷாம்புவைத் தேர்வுசெய்வது அவசியம்” என்கிறார் அழகுகலை நிபுணர் வசுந்தரா.

ஷாம்பு

பொடுகு பிரச்னை உள்ளவர்களுக்கு…

பொடுகு பிரச்னை உள்ளவர்கள், ஆன்டி-டான்ட்ராஃப் ஷாம்புவைப் பயன்படுத்த வேண்டும். இதில் உள்ள ஜிங்க் பைரத்யான் ( Zink pyrthion), தலையில் உள்ள பொடுகை அகற்ற உதவுகிறது. தலையில் ஏற்படும் எரிச்சல், நமைச்சல் போன்றவற்றைப் போக்கவும் செய்கிறது.

முடி அடர்த்தி வேண்டும் என்பவர்களுக்கு…

வால்யூமைசிங் ஷாம்பு ( Volumizing) பயன்படுத்த வேண்டும். இதன்மூலம், குறைந்த தலைமுடி உடையவர்களும் அடர்த்தியாகக் காண்பித்துக்கொள்ள முடியும்.

வறண்ட முடி உடையவர்களுக்கு…

மாய்ஸ்சரைசிங் ஷாம்பு, வறண்ட முடி உடையவர்களுக்கான பிரத்தியேகமானது. இதனால், மென்மையான கூந்தலைப் பெறலாம்.

கூந்தல்

கலரிங் செய்து கொண்டவர்களுக்கு…

ரிவைட்டலைசிங் ஷாம்புவைப் பயன்படுத்த வேண்டும். கூந்தலுக்கு கலரிங் செய்தவர்கள், ஸ்ட்ரைட்டனிங், பர்மிங் போன்ற கெமிக்கல் சிகிச்சை எடுத்துக்கொண்டவர்கள் பயன்படுத்த வேண்டியது. அல்லது,  கெரடோலிடிக் ஷாம்பு பயன்படுத்தலாம். கலரிங் செய்துகொண்டவர்கள் ஷாம்பூ வாங்கும்போது, அதில் சோடியம் லாயூரல் ஈத்தர் சல்பேட் இல்லாமல் இருக்க வேண்டும். இது, முடியில் உள்ள எண்ணெய் தன்மையை உறிஞ்சி, வறட்சி ஆக்கிவிடும்.

எண்ணெய்ப்பசை கூந்தல் உடையவர்கள்….

மைல்டு அல்லது ஜெல் வகை ஷாம்புகளைப் பயன்படுத்தலாம்.

முடி கொட்டும் பிரச்னை உள்ளவர்களுக்கு…

முடி வலுவிழந்து கொட்டுகிறது எனில், வைட்டமின் அல்லது ஒமேகா கலந்த ஷாம்புவைப் பயன்படுத்த வேண்டும்.

நார்மல் கூந்தல் உடையவர்கள்…

உங்கள் கூந்தல் நார்மல் வகை எனில், மைல்டு டிடர்ஜென்ட் உள்ள ஷாம்புவைப் பயன்படுத்தலாம். இது, தலையில் ஈரப்பதத்தைத் தக்கவைக்கும்.

சுருட்டைமுடி உடையவர்களுக்கு…

ஸ்மூத்திங் வகை ஷாம்புகளைப் பயன்படுத்தலாம்.

இதுபோன்று உங்கள் கூந்தலின் தன்மை மற்றும் பிரச்னைகளை அறிந்து அதற்கேற்ப ஷாம்புவைத் தேர்வுசெய்வது நல்லது.

ஷாம்பூ வாங்கும்போது கவனிக்க…

சோடியம் லாரத் சல்ஃபேட், சோடியம் லாரில் சல்ஃபேட் பாராபின், அமோனியம் லாரில் சல்ஃபேட் போன்ற கெமிக்கல்களின் பெயர் லேபிளில் இருந்தால், இயன்றவரை அந்த ஷாம்புகளைத் தவிர்க்கலாம். இவை, கூந்தலை மோசமாகப் பாதித்து, இயற்கைத் தன்மையை இழக்கச் செய்யும்.

ph மதிப்பு 4.5 முதல் 5-க்குள் இருக்க வேண்டும். பொதுவாக, நாம் வாங்கும் ஷாம்பு பாக்கெட்டுகளில் இது குறிப்பிடப்படுவதில்லை. எனவே, அந்த பிராண்டு ஷாம்பு பாட்டிலை ஒருமுறை செக் செய்து வாங்குவது நல்லது.

டூ இன் ஒன் எனப்படும் கண்டிஷனரும் ஷாம்புவும் கலந்த ஷாம்புகளைப் பயன்படுத்துவதைத் தவிப்பதே நல்லது. இவை அழுக்கை எடுக்கும் வேலையையும் க்யூட்டிக்கிளை மூடும் வேலையையும் ஒரே நேரத்தில் செய்வதால், இரண்டையும் சரியாகச் செய்யாமல் முடியைப் பாதிக்கும்.

ஷாம்புவில் புரோட்டின் இருந்தால், கூந்தலின் தரம் மேம்படும். அதன் நெகிழ்சித்தன்மை அதிகமாகும். கூந்தல் பார்க்க அழகாகத் தெரியும்.

வீட்டிலே ஷாம்பு தயாரிக்க…

தேவையானவை:

செம்பருத்தி பூ – 10

பூந்திக்கொட்டை- 10

தண்ணீர் – ஒரு லிட்டர்

செய்முறை:

செம்பருத்தி இதழைச் சூடான வெந்நீரில் சேர்த்து, அதன் எசன்ஸ் இறங்கும் வரை காத்திருக்கவும். தண்ணீர் சற்று நிறம் மாறியதும், பூந்திக்கொட்டை சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, வடிகட்டி சுத்தமான பாட்டிலில் ஊற்றிப் பயன்படுத்தவும். இது, கூந்தலை பட்டுப்போலப் பளபளக்கச் செய்யும்.

எண்ணெய் தேய்த்து குளிக்கும் நாளில்…

தேவையானவை:

சீகைக்காய்த்தூள் – 20 கிராம்

பூந்திக்கொட்டைதூள் – 20 கிராம்

செம்பருத்தி பூ பொடி – 10 கிராம்

வேப்பிலைப் பொடி – 10 கிராம்

கற்றாலையின் சதைப் பகுதி – சிறிது

இவை அனைத்தையும் கற்றாலையின் சதைப் பகுதியுடன் கலந்து தலையில் தேய்த்து மசாஜ் செய்து அலசவும்.