ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வைகோ பிரசாரப் பயணம்!

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தூத்துக்குடி மாவட்டத்தில் வாகனப் பிரசாரப் பயணம் மேற்கொள்கிறார்.

வைகோ

காவிரி விவகாரம், கெய்ல் பிரச்னை, நியூட்ரினோ என மக்களைப் பாதிக்கும் விவகாரங்களில் ஒலிக்கும் முதல் எதிர்ப்புக் குரலாக இருப்பது, வைகோவின் குரலாகவே இருக்கும். அந்த அளவுக்கு மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஆர்வம் காட்டி வரும் அவர், கடந்த வாரத்தில் நியூட்ரினோ எதிர்ப்பு நடைப்பயணத்தை நிறைவு செய்தார்.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 23 வருடங்களாகக் குரல் கொடுத்து வருவதுடன், அந்த ஆலைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தது சட்டப் போராட்டத்தையும் முன்னெடுத்து வருகிறார்.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 17-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) வைகோ வாகன பிரச்சாரப் பயணம் தொடங்குகிறார். ஐந்து நாட்கள் நடக்க உள்ள இந்தப் பயணத்தை கோவில்பட்டியில் 17-ம் தேதி மாலை 4 மணிக்கு அவர் தொடங்குகிறார்.

பின்னர் அங்கிருந்து, எட்டயபுரம், புதூர், நாகலாபுரம், விளாத்திகுளம், சூரங்குடி, வைப்பார் வழியாக குளத்தூர் சென்று முதல்நாள் பிரசார பயணத்தை முடித்துக் கொள்கிறார். வழிநெடுகிலும் சந்திக்கும் விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினரிடமும், ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதனால் அந்த ஆலையை நிரந்தரமாக அகற்ற வேண்டியதன் அவசியம் பற்றியும் விளக்கிக் கூறுகிறார்.

பின்னர், 18-ம் தேதி (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு கரிசல்குளம் கிராமத்தில் பிரசார பயணத்தைத் தொடங்கும் வைகோ, காமநாயக்கன்பட்டி, பசுவந்தனை, ஒட்டப்பிடாரம், புதியம்புத்தூர் வழியாகச் சென்று குறுக்குச் சாலையில் இரண்டாம்நாள் பயணத்தை நிறைவு செய்கிறார்.

அதனைத் தொடர்ந்து 21-ம் தேதி செய்துங்கநல்லூரில் பயணத்தை மேற்கொள்ளும் வைகோ, ஆழ்வார்திருநகரி, நாசரேத், பேய்குளம், சாத்தான்குளம் வழியாக மெஞ்ஞானபுரம் வழியாக உடன்குடியில் முடிக்கிறார். பின்னர் 22-ம் தேதி மாலை 4  மணிக்கு திருவைகுண்டம் பகுதியில் பிரசாரத்தைத் தொடங்கி ஏரல், ஆத்தூர், காயல்பட்டினம், திருச்செந்தூர், மணப்பாடு வழியாகச் சென்று பெரியதாழை பகுதியில் அன்றைய பிரசார பயணத்தை முடிக்கிறார்.

தொடர்ந்து, 28-ம் தேதி மாலை 6 மணிக்கு தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதில், ஸ்டெர்லைட் ஆலையின் பாதிப்புகளால் தூத்துக்குடி மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் ஆலையின் அத்துமீறல்கள் பற்றியும் பேச உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.