கடல் நீரைக் குடிநீராக மாற்றினால் இவையெல்லாம் நடக்கும்!!!

கடல் நீர்

உலக தண்ணீர் தினம் கடந்த மாதம் 22-ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. தண்ணீரைச் சேமிப்பது மற்றும் அதைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உலக மக்கள் அனைவரும் தென் ஆப்ரிக்காவின் “ஜீரோ டே” மூலமாகப் புரிந்துகொண்டு இருப்போம். ஆனால், அதற்கான தீர்வாக “இன்றைய உலகமயமாக்க அறிவியல்” கூறும் மாற்றுகளில் பலவும் பல்வேறு பின்விளைவுகளைக் கொண்டவையாகவே இருப்பது வேதனைக்குரியது. அத்தகைய ஒன்றுதான் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம். உலகின் முதல் பெரிய உப்பு நீக்கி கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையம் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் திறக்கப்பட்டது. அதன் வெற்றிகரமான செயற்பாட்டினைத் தொடர்ந்து உலகின் பல்வேறு பகுதிகளில் திறக்கப்பட்டது. இந்தியாவிலும் இது நிகழ்ந்தது. இந்தியாவின் மிகப்பெரிய உப்பு நீக்கிக் குடிநீராக்கும் நிலையமாக தமிழ்நாட்டின் மீஞ்சூரில் உள்ளது.

கடலில் தான் அள்ள அள்ளக் குறையாத நீர் உள்ளதே அதை எடுத்துப் பயன்படுத்துவதில் என்ன தவறு?

இந்தக் கேள்விக்கான விடையைத் தெரிந்துகொள்ளவும், இதன் விளைவுகளைப் புரிந்துகொள்ளவும் முதலில் இந்த உப்பு நீக்கச் செயல்முறையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

வெண்கண்டல், சதுப்புநிலக் காடுகளில் வளரக்கூடிய தாவரம். இதன் மூலம் தான் இந்தக் கடல் நீரில் இருந்து குடிநீர் முறையே சாத்தியமானது. இந்தத் தாவரம் வளர்வதோ உப்பு நீர் நிறைந்த கடலோரப் பகுதியில். ஆனால், அது வளர்வதற்குத் தேவையோ நன்னீர். முதலில் தன்னைச் சுற்றியுள்ள உப்புநீரையே உறிஞ்சிக்கொண்டு, அதில் இருக்கும் நல்ல நீர், ஊட்டச்சத்துகள் அனைத்தும் எடுத்துக்கொள்ளும். மீதமிருக்கும் உப்பைத் தனது இலைத்துளைகள் மூலமாக வெளியே துப்பிவிடும்.

கடல் நீரைக் குடிநீராக்குவதற்கு இதைப் பின்பற்றியே, ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் (Reverse Osmosis) எனப்படும் எதிர் சவ்வூடுபரவுதல் என்ற செயல்முறையைப் பயன்படுத்துகிறார்கள். மேலும், சில செயல்முறைகள் இருந்தாலும் இதுவே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. உலகில் உள்ள 66% உப்பு நீக்க நிலையங்கள் இதைத்தான் பின்பற்றுகின்றன. அதாவது கடலுக்குள் இருந்து இந்த நிலையத்தில் இருக்கும் செயலாக்கத் தொட்டிக்குக் குழாய் வழியாகக் கடல்நீர் கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து உயிரினங்கள் ஏதேனும் இருந்தால்கூட அது வடிகட்டப்பட்டு நீரில் இருந்து உப்பைப் பிரிப்பதற்குக் கொண்டு செல்லப்படுகிறது. உள்ளே செலுத்தப்படும் நீர் வடிகட்டுவது உட்பட ஏழு செயல்பாடுகளுக்கு உள்ளாக்கப்படும்.

வடிகட்டப்பட்ட கடல்நீர், முதலில் அதிக காற்றழுத்தத்துக்கு உட்படுத்தப்பட்டுப் பல அடுக்குகளாக இருக்கும் மெல்லிய தோல் போன்ற தொகுப்பு வழியாகச் செலுத்தப்படும். அதன் மூலம் நீரில் இருக்கும் பாக்டீரியாக்கள் உறிஞ்சப்படும். அத்தோடு உப்பின் அளவு குறைக்கப்பட்டு அது அடிமட்டத்தில் குவிக்கப்படும். இதன்மூலம், கிட்டத்தட்ட 80% தேவையற்ற பாக்டீரியாக்கள் மற்றும் உப்பின் அளவு குறைக்கப்பட்டு விடும். அதன்பிறகு, நீரின் பி.ஹெச் எண் (pH value) குடிநீரின் தரத்துக்கு ஏற்ப சரிசெய்யப்படும். மேற்கூறிய செயலின்போது தேவையற்ற பாக்டீரியாக்களோடு சில ஊட்டச்சத்துகளும் பிரிக்கப்பட்டுவிடும். அனைத்து சத்துகளையும் நீக்கிய நீரைக் குடிப்பதால் எந்தப் பயனும் இருக்காது. ஆகவே குடிநீருக்குத் தேவையான சில மினரல்களை செயற்கையாகச் சேர்த்து குடிநீராக விநியோகிக்கப்படும்.

இந்தச் செயல்முறையில் குவியலாகச் சேகரிக்கப்படும் உப்பினை என்ன செய்வது?

கொட்டு கடலில். அது எதற்கு இருக்கிறது. அதுல தான் ஏற்கெனவே உப்பு இருக்கே. உப்போட உப்பா இதுவும் இருந்துட்டுப் போகட்டும்.

இப்போது மேலே கேட்கப்பட்ட கேள்விக்கு வருவோம்.

அள்ள அள்ளக் குறையாமல் கடலில் இருக்கும் நீரைத் தாராளமாக எடுத்துப் பயன்படுத்தலாம். ஆனால், அதைச் சுத்திகரித்தப் பிறகு மிஞ்சும் பெருமளவு உப்பினைக் கடலில் கொட்டுவதால் கடலுக்கு ஒன்றும் ஆகாதுதான். ஆனால், அதில் வாழும் உயிர்களின் வாழ்வாதாரத்துக்கு ஆபத்தை விளைவிக்கும். ஆம், கடல்வாழ் உயிரினங்கள் அனைத்தும் உப்புநீருக்கு ஏற்றவாறு வளர்ந்தவையாக இருந்தாலும் அவற்றுக்கு என்று ஒரு வரையறை உள்ளது. நீரின் உவர்ப்பு அளவு அந்த வரையறையை மீறினால், அதில் அவற்றால் ஜீவித்திருக்க முடியாது. ஜோர்டான், பாலஸ்தீன், இஸ்ரேல் ஆகிய நாடுகளை எல்லையாகக் கொண்டுள்ள உப்புநீர் ஏரியில் (Dead Sea) இருக்கும் அதிக அளவிலான உப்பினால் அதில் உயிர்கள் வாழ முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி உப்பின் அளவு அதிகமாவது, கடல்நீரோட்டத்தை மாற்றுவதோடு மட்டுப்படுத்தவும் வாய்ப்புகள் உண்டு.

கடல் நீரில் இருந்து குடிநீர்

கடல் நீரைக் குடிநீராக்கும்போது உள்ளே செலுத்தப்படும் நீரின் அளவில் பாதிக்கும் குறைவாக மட்டுமே பயன்படுத்த ஏதுவான நீராக வெளியே வரும். மீதம் இருக்கும் நீர் பயன்படுத்த முடியாத உபரி நீராகவே வீணாகும். இதனால் பெரும் அளவிலான நீர் வீணாக்கப்படுகிறது. உதாரணமாக 20 லிட்டர் நன்னீருக்காக 75 லிட்டர் கடல் நீர் வீணாக்கப்படுகிறது.

இருக்கும் நீர்நிலைகளைப் பராமரிப்பதை விட்டு, அவற்றை ஆக்கிரமித்து கட்டடங்களும் கல்லூரிகளும் கட்டியதோடு நாம் நிற்கவில்லை. இருக்கும் கொஞ்சம் நீராதார ஆறுகளையும் சாயக்கழிவுகளைக் கலப்பதற்கும், வெளிநாட்டு நிறுவனங்களின் பயன்பாட்டுக்கும் கொடுத்துவிட்டோம். தற்போது நமது சுயநலத்துக்காக கடல்வாழ் உயிரினங்களின் அழிவைக்கூடப் பொருட்படுத்தாமல் அதையும் அள்ளிக் கொண்டிருக்கிறோம். மனித இனத்தின் சுரண்டலுக்கு எதிராக எழுந்து நிற்கத் திராணியற்று வீழ்ந்துகிடக்கும் இயற்கையின் ஓலம் அதன் உயிர் மிஞ்சி நிற்கும் உலகின் ஒவ்வோர் மூலையிலும் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது. அதை மனிதனும் அலட்சியப் படுத்திக்கொண்டே தொடர்ந்து சுரண்டுகிறான். இறுதியில் அவள் பிழைத்துவிடுவாள். மனிதன்…?