கொள்ளையர்கள் தடயத்தை மறைக்க நடத்திய விநோதம்! அதிர்ந்த போலீஸ்!

தி.மு.க பிரமுகரின் தம்பி வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றதோடு, தடயத்தை மறைப்பதற்காக விநோதச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளையர்களின் இந்தச் செயல் காவல்துறையினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள விசாலாட்சி நகரில் வசிக்கும் நகைக்கடை அதிபா் சரவணன். இவா், தி.மு.க மாநில இளைஞரணி இணைச் செயலாளா் சுபா.சந்திரசேகரனின் தம்பி ஆவார். இவர் தினமும் காலையில் தன் மனைவி தேவியுடன் வாக்கிங் செல்வது வழக்கம். இவர்கள், வெளியில் செல்லும்போது நகைகளை வீட்டில் வைத்துவிட்டுச் செல்வார்களாம். இன்று அதிகாலை இருவரும் நகைகளை வீட்டில் வைத்துவிட்டு நடைப்பயிற்சி சென்றுள்ளனர். வாக்கிங் சென்றுவிட்டு வீடு திரும்பியவர்கள் அதிர்ச்சியடைந்தனர். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து உள்ளே சென்றனர். அப்போது, வீட்டில் இருந்த 16 சவரன் நகை மற்றும் 3 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து காவல்துறையில் சந்திரசேகரன் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் ஜெயங்கொண்டம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து 100 மீட்டர் தூரத்தில் நடைபெற்றது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கை விசாரித்துவரும் காவல்துறையினரிடம் பேசினோம். “சினிமா பட பாணியில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருக்கிறார்கள்.  கொள்ளையடித்துவிட்டுச்  செல்லும்போது மோப்ப நாய்களுக்கு மோப்ப சக்தி வந்துவிடக் கூடாது என்பதற்காகவே அவர்கள் கைரேகை பட்ட இடம், வீட்டினுள் உலாவிய இடங்களில் எல்லாம் மிளகாய் பொடியைத் தூவிச் சென்றிருக்கிறார்கள். மிளகாய்ப் பொடி தூவி கொள்ளையடிக்கும் கும்பலிடம் விசாரித்துக்கொண்டிருக்கிறோம்.

அதுமட்டுமல்லாமல் வீட்டின் பூட்டை உடைத்ததே சற்று வித்தியாசமாக இருக்கிறது. இது வடமாநிலத்தவர்களின் கைவரிசையாகக்கூட இருக்கலாம் என்பதால் மூன்று பேரை பிடித்து விசாரித்துக்கொண்டிருக்கிறோம். விசாரணை சென்றுகொண்டிருக்கிறது. பிறகு பேசுகிறோம்” என்று முடித்துக்கொண்டார்கள்.

கடந்த வாரம் ஜெயங்கொண்டம் அருகே நகைக்காகப் பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.