காலம் கடந்த பின்னர் சூரிய வணக்கம்!

ஆயுள் முடியப் போகும் நேரத்தில், வடக்கு மாகாணத்தின் எல்லையில் நடக்கும் அக்கிரமங்களுக்குக் குறைந்தது அடையாள எதிர்ப்பையாவது காட்டுவதற்கு வடக்கு மாகாண சபை தயாராகி இருக்கிறது.

எதிர்வரும் 10ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு எதிராகக் கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தப் போவதாக வடக்கு மாகாண சபை அறிவித்துள்ளது.

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை தடுக்க வலியுறுத்தியே இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

வடக்கு மாகாண சபை அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட நான்கரை வருடங்கள் முடிந்து விட்டன. எஞ்சியிருப்பது இன்னும் 6 மாதங்கள் தான்.

மாகாண சபை பதவிக்கு வந்தபோது கொழும்பில் ஆட்சியில் இருந்தவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.இவரது காலத்தில் எல்லைப்புறக் கிராமங்களிலும், வடக்கு மாகாண சபையின் எல்லைக்குள்ளும், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அம்பாந்தோட்டை போன்ற மிகத் தொலைதூரக் கிராமங்களில் இருந்தெல்லாம் சிங்கள மக்கள் ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து வரப்பட்டுக் குடியேற்றப்பட்டார்கள். இது தவிர பௌத்த மயமாக்கலும் தீவிரமாக நடந்தது.

வடக்கு மாகாண சபை பதவியேற்றதுமே தனது கையில் எடுத்திருக்க வேண்டிய மிக முக்கிய பிரச்சினையாக இது இருந்தது. ஆனால், சபையும் அதனை ஆட்சி செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் அது பற்றி அலட்டிக் கொள்ளவில்லை.

தீர்மானங்களை நிறைவேற்றுவதுடன் இந்தப் பிரச்சினையைக் கடந்து சென்று விட்டார்கள்.அதன் பயனாக, எல்லையில் சிங்களக் குடியேற்றங்கள் வலுவாகக் காலூன்றத் தொடங்கி விட்டன.

சிங்கள அதிகாரிகள் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்குச் சாதகமாக நடந்து கொண்டார்கள்.வடக்கு மாகாண ஆளுநராக இருந்தவரான மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியும் ஆரம்பத்தில் குடியேறிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்தார்.

தமிழ் அதிகாரிகள் இதில் தர்மசங்கடத்துக்குள் மாட்டிக் கொண்டார்கள்.தமது உயர திகாரிகள் சொல்வதைச் செய்து குடியேற்ற வாசிகளுக்கு ஆதரவாக இருப்பதா, இல்லையென்றால் உண்மையின் பக்கம் நிற்பதா என்பதே அவர்களின் குழப்பத்திற்குக் காரணம்.

இவர்களின் இந்தக் குழப்பத்தையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பெரும்பான்மையின அதிகாரிகள் , சிங்களக் குடியேறிகளுக்குச் சாதகமாக எல்லாவற்றையும் நகர்த்த ஆரம்பித்தார்கள்.

அதனாலேயே அரசிதழ் (வர்த்தமானி) மூலம் அறிவிக்கப்படாமலேயே வெலிஓயா (மணலாறு) என்றொரு பிரதேச செயலகம் சிங்களவர்களுக்காக இயங்குகின்றது.

மகாவலி ‘எல்’ வலயம் என்ற போர்வையில் இந்தப் பகுதியில் மீண்டும் சிங்களக் குடியேற்றங்களை வலுப்படுத்தும் நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டன.

இந்த நடவடிக்கைகளால் தமிழ் மக்களின் உறுதிகள் கொண்ட காணிகள் பலவும் கூட இப்போது சிங்களக் குடியேறிகளின் வசமாகி விட்டன.

அவற்றை மீட்க முடியாத நிலையில், தமிழ் அதிகாரிகளின் ஆதரவும் இல்லாத நிர்க்கதியாக நிலையில், அந்தப் பகுதித் தமிழ் மக்கள் தவிக்கின்றனர்.

மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் இந்தப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் 30 ஆண்டு கால ஆயுதப் போராட்டம் மூழுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று.

விடுதலைப் புலிகளின் தாக்குதல்களால் தடைப்பட்டிருந்த இந்தக் குடியேற்றங்கள், போர் முடிந்ததும் விட்ட இடத்தில் இருந்து தொடர ஆரம்பித்து விட்டன.

30 ஆண்டுகளுக்கு முந்தைய தமது திட்டத்திலிருந்து இம்மியளவும் விலகாமல் அவர்கள் இருந்தார்கள் என்பதை அவர்களது நடவடிக்கைகள் நிரூபித்து விட்டன.

ஆனால், ஆயுதப் போராட்டத்தின் தொடர்ச்சியாகவும், தமிழ் மக்களின் சுதந்திர வேட்கையின் மறுவடிவமாகவும் முகிழ்த்த வடக்கு மாகாணசபை அதற்கெதிரான போராட்டத்தைத் தொடரவில்லை. அல்லது மிக மிக காலதாமதமாகத் தொடங்கியிருக்கிறது.

இதனை, சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர்களே சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். இந்த விடயத்தில் மாகாண சபையினர் என்ன செய்தார்கள் என்கிற கேள்வியை அவர்களே எழுப்பியிருக்கிறார்கள்.

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் கீழ் காணி அதிகாரங்கள் மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், அதனைப் பயன்படுத்தியாவது மாகாண முதலமைச்சர் சிங்களக் குடியேற்ற விடயத்தில் எதையாவது முயன்றிருக்கலாம்.

அதுவும் நடக்கவில்லை. காலம் கடந்த பின்னர் சூரிய வணக்கம் என்பதைப் போல இந்த விடயத்தில் மாகாண சபையினர் எடுக்கும் நடவடிக்கையால் என்ன பயன் கிட்டப்போகின் றது, அவர்களுக்குக் கிடைக்கப் போகும் அரசியல் லாபம் தவிர என்பது கேள்விக்குரியதே!