டக்ளசிற்கு மிரட்டல் விட்ட ரணில்?

இலங்கை அரசியலில் பல்வேறுபட்ட சர்ச்சைகளை ஏற்படுத்திய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மிரட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயம் தொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிற்கு, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுதந்திரக்கட்சியின் உயர்மட்ட முக்கியஸ்தர்கள் சிலர் அழுத்தங்களைப் பிரயோகித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு உயர்மட்ட அதிகாரங்களில் இருந்து கொடுக்கப்பட்ட அழுத்தம் மற்றும் மிரட்டல்களின் காரணமாகவே டக்ளஸ் தேவானந்தா குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமது எதிர்ப்பினைத் தெரிவித்ததாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பிரதமருக்கு எதிராக செயற்பட தீர்மானித்திருந்த டக்ளஸ் தேவானந்தா அழுத்தங்களின் காரணமாகவே அவர் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தார் எனத் தெரியவந்துள்ளதாகவும் கொழும்பு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிரதமர் வெற்றி பெற்றிருந்த போதிலும் பல்வேறு முரண்பட்ட சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளதோடு, பிரதமருக்கு எதிராக செயற்பட்ட அமைச்சர்களில் பதவிகள் தொடர்பிலும் முரண்பட்ட கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.