நள்ளிரவில் இளைஞர்களின் நடவடிக்கை: 4பேர் கைது!

முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 4 பேர் சற்றுமுன் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதுடன், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட 9 நபர்களை நையப்புடைக்கும் நடவடிக்கையில் அந்தப்பகுதி இளைஞர்கள் இரவு நேரத்தில் ஈடுபட்டிருந்தனர்.

முள்ளியவளை, பொன்நகர் பகுதியில் மாலைநேர வகுப்பிற்கு சென்று வீடு திரும்பிய மாணவிகளை இடை மறித்த 3 நபர்களை பிரதேச வாசிகள் நையப்புடைத்துள்ளனர். பின்னர் கடுமையான எச்சரிக்கையுடன் விடுவித்திருந்தனர்.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட 3 நபர்களும் மேலும் 6 நபர்கள் ஒன்று சேர்ந்து இன்று இரவு குறித்த பிரதேசத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், இந்த பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து இவ்வாறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர்களை நள்ளிரவு நையப்புடைத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் 4 சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் , இளைஞர்களின் அதிரடி நடவடிக்கையின் மூலம் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 5 சந்தேகநபர்கள் பெருங்காட்டுப் பகுதிக்குள் தப்பி ஓடியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.