புதிய பிரதமர் யார்? மைத்திரி கொடுத்துள்ள வாக்குறுதி!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாளை நாடாளுமன்றத்திற்கு வருகிறது.

மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிராணியனர் எப்படியாவது பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை கீழறக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றனர்.

அதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கும் சிலரும் பிரதமர் பதவியில் இருந்து ரணிலை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் இருக்கியிருக்கின்றார்கள்.

இந்நிலையில், பிரதமரின் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்து வரும் ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள குழுவினரிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக அக் கட்சியினை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

குறிப்பாக புதிய பிரதமர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தெரிவு செய்யப்பட்டால், தமது கட்சிக்கு அமைச்சர்கள் வழங்கும் போது குறைவாகவே வழங்கப்படும் என அக்குழுவிலுள்ள சிலர் கருகின்றார்கள்.

பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்தால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கமொன்றை அமைப்பதற்கு நாடாளுமன்றத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் ஒதுங்கியிருந்து ஆதரவு வழங்கவுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணி ஏற்கனவே அறிவித்துள்ளது.

அவ்வாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் அரசாங்கமொன்று அமையும் பட்சத்தில் தமக்கு முக்கிய அமைச்சுக்கள் இல்லாமல் போகும் நிலை ஏற்படும் எனவும் அக்குழுவிடையே இரு கருத்துக்கள் உருவாகியுள்ளன.

ஆனால், நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களைச் சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய பிரதமர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தே தெரிவு செய்யப்படுவார் எனக் கூறியிருந்ததாகவும் அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதற்கிடையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

அதனையடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் எதிர்க் கட்சித் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் என்ன முடிவுகள் ஏற்படும் என்பது தொடர்பில் கொழும்பு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.