கடலில் மூழ்கி இரண்டு தமிழர்கள் பலி: புகைப்படம் எடுக்க முயன்றபோது ஏற்பட்ட பரிதாபம்!

மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான செயிண்ட் லூசியா தீவில், தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 3 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாய் உயிரிழந்துள்ளனர்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கங்காதரன் மற்றும் தேவி தம்பதியரின் மூத்த மகன் புவனகங்கேஸ்வரன்.

இவர், மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான செயிண்ட் லூசியா தீவில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வந்தார்.

இந்நிலையில், இரண்டாம் ஆண்டு படிப்பு முடிந்ததைக் கொண்டாடும் வகையில், அங்குள்ள கடற்கரையில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

அப்போது, புவனகங்கேஸ்வரன் மற்றும் பெங்களூருவை சேர்ந்த இந்துமதி ஆகியோருடன் சிலர் பாறை மீது ஏறி புகைப்படம் எடுக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக புவனகங்கேஸ்வரனும், இந்துமதியும் கடலில் விழுந்து மூழ்கினர்.

அவர்களை காப்பாற்ற உடனடியாக கடலில் குதித்த பேராசிரியர் பூபதி என்பவரும் அவர்களுடன் சேர்ந்து மூழ்கி இறந்தார்.

பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்த பூபதி, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

மகனது இறப்பு செய்தி கேட்டு துயரத்தில் மூழ்கிய பெற்றோர், சடலத்தை இந்தியா கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.