
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. ‘ ஆட்சிக்கு எதிராகப் போராட வேண்டிய தினகரன், விவசாயிகள் நடத்தும் விமான நிலைய முற்றுகைப் போராட்டத்தில் மட்டும் கலந்துகொள்கிறார். இப்படியிருந்தால் கட்சியை எப்படி வளர்ப்பது?’ எனக் கொந்தளிக்கின்றனர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்பினர்.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து அரசியல் கட்சிகள் தீவிரமாகக் களமிறங்கியுள்ளன. தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் நேற்று அளித்த பேட்டியில், ‘ தமிழகத்தில் இரட்டை ஆட்சி நடக்கிறது. பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் தமிழகம் வரும் போது அவர்களுக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டப்படும். காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 5-ம் தேதி தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு அ.தி.மு.க.வுக்கும் அழைப்பு விடுக்கப்படும்’ எனக் கூறினார். கடந்த சில நாள்களாக காவிரி விவகாரத்தில் தி.மு.கவினர் நடத்தும் போராட்டங்களால் ஆட்சியாளர்களுக்குக் கூடுதல் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அழைப்புவிடுத்துள்ளது அ.தி.மு.க. ‘ ஸ்டாலின் நடத்தும் போராட்டங்களை மக்கள் நம்ப மாட்டார்கள்’ எனவும் கொதித்தார் அமைச்சர் ஜெயக்குமார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கியது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அதேநேரம், காவிரி விவகாரம் தொடர்பாக தினகரனின் அம்மா முன்னேற்றக் கழகம் எந்தவிதப் போராட்டங்களிலும் பெரிதாகப் பங்கேற்கவில்லை. இதுதொடர்பாக, உள்கட்சிக்குள்ளேயே விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக, நேற்று அறிக்கை வெளியிட்ட தினகரன், ‘ பழனிசாமியின் அரசு உண்மையான அழுத்தத்தை வழங்காத காரணத்தால் காவிரி மேலாண்மை வாரியம் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அமையாமல் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் தமிழகத்துக்குச் செய்துவரும் துரோகத்தால், தன்னெழுச்சி போராட்டங்கள் தொடங்கிவிட்டன. இதில், ஒருபகுதியாக டெல்டா பகுதி விவசாயிகள் சங்கத் தலைவர்கள் முன்னெடுக்கும் விமானநிலைய முற்றுகை, ரயில் நிலையம், சாலை மறியல், கடையடைப்பு ஆகிய போராட்டங்களில் பங்கேற்க இருக்கிறோம். நாளை (3.4.18) காலை 11 மணியளவில் திருச்சி விமானநிலைய முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்கிறேன். தமிழகத்தின் உணர்வுபூர்வமான இப்போராட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், உடன்பிறப்புகள், அனைத்து தரப்பு பொதுமக்களும் திரளாக கலந்துகொள்ள வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்திருந்தார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சீனியர் நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ” காவிரி பிரச்னையில் தீவிரமான போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்கவில்லை. விவசாயிகள் சங்கம் நடத்தும் போராட்டத்தில் ஒருவராக நிற்பது எப்படி சரியானதாக இருக்கும்? மாநிலம் முழுவதும் அமைப்புரீதியாக ஆள்கள் இல்லாததால், ‘பலம் இவ்வளவுதான் என வெளிப்பட்டுவிடுவோம்’ என நினைக்கிறார் தினகரன். தமிழ்நாடு முழுவதும் நெட்வொர்க் இல்லாததுதான் குறையாக இருக்கிறது. புதிய அமைப்பாக இருப்பதால், சில மாவட்டங்களில் இளைஞர்கள் கூடுகிறார்கள். அண்ணா தி.மு.கவில் இருந்து, எங்கள் அமைப்பில் கலந்துகொண்டு போராடுவதற்குத் தொண்டர்கள் யாரும் தயாராக இல்லை. கரூரில் உள்ளூர் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக செந்தில்பாலாஜியால் அரசியல் செய்ய முடிகிறது. டெல்டா மாவட்டங்களிலும் அ.தி.மு.க அமைச்சர்களுக்கு எதிராகப் போராட முடிகிறது. மற்ற மாவட்டங்களில் சொல்லிக் கொள்ளும்படியாக எதுவும் இல்லை.
காவிரி பிரச்னையில் தி.மு.க நிர்வாகிகள் பெரும் திரளாகக் கைதாகிறார்கள். மாநிலம் முழுவதும் அமைப்புரீதியாக செல்வாக்கு இல்லாத வேல்முருகன் கட்சித் தொண்டர்கள்கூட தீவிரமாகப் போராடுகிறார்கள். எங்கள் கட்சித் தொண்டர்கள் யாரும் கைதாகவில்லை. தஞ்சை உண்ணாவிரதம், திருச்சி, மேலூர் ஆகிய இடங்களில் ஓரளவுக்குக் கூட்டத்தைக் கூட்டி தினகரனால் பேச முடிந்தது. தஞ்சை உண்ணாவிரதப் போராட்டத்தில் டெல்டாவே ஸ்தம்பித்தது. இந்தப் போராட்டத்தை அடுத்தகட்டத்துக்கு தினகரன் கொண்டு சென்றிருக்க வேண்டும். மத்திய அரசை உலுக்கும் வகையில் செயல்பட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்வதற்கு அவர் தவறிவிட்டார். ஆர்.கே.நகர் வெற்றிக்குப் பிறகு பரவலாக பொதுக்கூட்டங்கள் நடத்தப்படவில்லை. தொடர்ச்சியாக கூட்டம் நடத்தப்படாததால்தான் சம்பத் வெளியேறினார். கட்சியை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது தெரியாமல், தலைமை தயங்கிக் கொண்டிருப்பதை உணர முடிகிறது. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்திருக்க வேண்டும். காவிரி விவகாரம், கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆகியவற்றின் மூலம், கட்சியின் பலவீனம் வெளிப்பட்டிருக்கிறது. இந்தநிலை நீடித்தால் இப்படியொரு அமைப்பு இருப்பதே மக்களுக்குத் தெரியாமல் போய்விடும்” என்றார் ஆதங்கத்துடன்.
” ஆளும்கட்சியின் பலவீன செயல்பாடுகளை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி வருகிறார் ஸ்டாலின். ‘ அமைப்பா…கட்சியா..?’ என்ற குழப்பமே எங்கள் அணியில் தீரவில்லை. மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தீவிரமாகத் தினகரன் போராடியிருக்க வேண்டும். எங்களைப் போலவே, டெல்டாவில் கொஞ்சம் செல்வாக்கை வைத்திருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, அவசரப் பொதுக்கூட்டம், போராட்டம் எனக் களத்தில் இறங்கியுள்ளது. ‘ அ.தி.மு.கவே என்னிடம்தான் இருக்கிறது. ஸ்லீப்பர் செல்கள் நேரம்வரும்போது வெளிப்படுவார்கள்’ என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் தினகரன், மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை வேகப்படுத்த மறுப்பதன் அர்த்தம்தான் விளங்கவில்லை. இனியும் பொதுக்கூட்டம், போராட்டம் என அறிவிக்காவிட்டால், இருக்கும் சில நிர்வாகிகளும் மாற்று முகாம்களை நோக்கிச் செல்ல வேண்டியது வரும்” என்கிறார் அம்மா முன்னேற்றக் கழகத்தின் தஞ்சை நிர்வாகி ஒருவர்.






