எடப்பாடி பழனிசாமி சொன்ன எலி கதை; பன்னீர்செல்வத்தின் புறா கதை

எடப்பாடி பழனிசாமி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை பாண்டிகோயில் அருகே, ‘அம்மா திடல்’ என்று அழைக்கப்படும் இடத்தில், இன்று 120 ஜோடிகளுக்கு 70  சீர்வரிசைப்  பொருள்கள் வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது .

இந்த விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட பல்வேறுதுறை அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

சரியாக 10:10 மணி அளவில், திருமணம் முடிந்த பிறகு சில எம்.எல்.ஏ-க்களும் அமைச்சர்களும் பேசினர். அதைத் தொடர்ந்து, துணை முதல்வர் பன்னீர் செல்வம் பேசும்போது, ” புறாக்களைப் பிடிக்க வேடர்கள் தங்கள் வலையை விரித்தனர். அதில், கொஞ்சம் தானியங்களையும் இட்டுக் காத்திருந்தனர். தானியங்களைப் பார்த்ததும், தங்களை அகப்பட வைக்கத்தான் இவ்வாறு செய்துள்ளார்கள் என்று தெரியாத புறாக்கள் அகப்பட்டுக்கொண்டன. விவரமாக இருந்த புறாக்கள் அகப்படாமல், மாட்டிக்கொண்ட புறாக்களை காலம் கெட்டுப்போகவில்லை வெளியே வந்துவிடுங்கள் . இல்லையென்றால், கூண்டோடு தப்பித்துவிடுங்கள் என்று தெரிவித்தன, அந்தப் புறாக்களின் நலன் கருதி. இந்தக் கதையைப் போல, தமிழக அரசியலில் பலர் அகப்பட்டுக்கொண்டுள்ளனர். அவர்களை அழைக்கிறோம்; வருவார்கள் என்று காத்திருக்கிறோம்” என்று இலை மறைவு காய் மறைவாகக் கதையைச் சொல்லி முடித்தார் .

அதைத் தொடர்ந்து, நிறைவாகப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எலிக்கதை ஒன்றைச் சொன்னார். ” காட்டில் ஒரு ஞானி இருந்தார். அவரிடம் சென்ற ஒரு எலி,  “என்னை பூனை ஒன்று அடிக்கடி மிரட்டுகிறது.  அதனால், என்னை பூனையாக மாற்றிவிடுங்கள்” என்றும் கேட்டுள்ளது. எலியின் வேண்டுதலை ஞானி நிறைவேற்றினார். அதைத் தொடர்ந்து, “என்னை நாய் மிரட்டுகிறது; அதனால், என்னை நாயாக மாற்றிவிடுங்கள்” என்று கேட்டுள்ளது. அதேபோல ஞானி செய்தார். நாயாக மாறிய பின், “என்னை புலி மிரட்டுகிறது அதனால், என்னை புலியாக மாற்றிவிடுங்கள்” என்றது . இதைக் கேட்ட ஞானி, “உனக்கு உருவம் பிரச்னை இல்லை, உன் மனதில்தான் பிரச்னை. எனவே, நீ உன் பழைய நிலைக்கே எலியாக மாறிவிடு” என்று ஞானி எலியை அதன் பழைய நிலைக்கே மாற்றிவிட்டார் . இதைப் போலத்தான் எல்லோர் வாழ்க்கையும். நாம் மனதில் பயம்கொள்வதால்தான் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, இருப்பதை வைத்துக்கொண்டு, அனைவரும் தைரியமாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும்” என மணமக்களுக்கு நீதிபோதனை வழங்கினார் .