உலகத்தையே வேதனை கொள்ள செய்துள்ள இரு பிள்ளைகளின் பரிதாப நிலை ஜனாதிபதியின் மனதில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லையா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
மட்டக்களப்பில் ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக்கோரி இடம்பெற்ற கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கையில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் கைதியான ஆனந்த சுதாகரனின் இரு பிள்ளைகளினதும் பரிதாப நிலையானது இந்த உலகத்தையே வேதனை கொள்ள செய்துள்ளது. ஆனால் இந்த விடயம் ஜனாதிபதியின் மனதில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லையா?
அவர் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் ஜனாதிபதிக்கு மாத்திரம் தான் ஒரு ஆயுள் தண்டனை கைதியை விடுதலை செய்வதற்கான அதிகாரம் இருக்கின்றது.
2015இல் ஆட்சி மாற்றத்தின் போது ஜனாதிபதியிடம் எமது தலைமை முன்வைத்த முதல் கோரிக்கை தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது தான்.
அப்போது அதனை ஜனாதிபதி ஏற்றுக் கொண்ட போதிலும், முழுமையாக அதற்கான நடவடிக்கையை அவர் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
அத்துடன், உடனடியாக ஆனந்த சுதாகரன் விடுதலை செய்யப்படாவிட்டால் வெவ்வேறு வழிகளில் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.






