தன் குட்டிகளையே பாம்புகள் சாப்பிட காரணம்?

ஆதிகாலக் கதைகளில் இருந்து இன்று ஹாரிபாட்டர் வரையிலுமே பாம்புகள் என்றால் தீமையின் வடிவமாக, தீய சக்தியின் முழு உருவமாகவேதான் பார்க்கப்படுகிறது.

அது கண்ணில் பட்டாலே அடித்துக் கொல்வதற்குத் துடியாய் துடிப்பதே மனிதர்களின் இயல்பாக இருந்துவருகிறது.

ஒருமுறை அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் இருக்கும் ஒரு கிராமத்தில் பாம்புகள் அதிகமாக இருந்ததால், அதைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்குப் பணம் தருவதாக அந்தப் பகுதியின் நிர்வாகக் குழு அறிவித்திருந்தது.

அதனால் அங்கிருந்த மக்கள் கண்ணில் பட்ட பாம்புகளை எல்லாம் பிடித்துக் கொடுக்க, காலப்போக்கில் அந்த கிராமத்தில் பாம்புகளே இல்லை என்ற நிலை வந்தது.

பாம்புகள் இல்லைதான், ஆனால், எங்கு பார்த்தாலும் எலி மயம். வயல்களில் அதிகமாக எலிகள், பொந்துகள் அமைத்துவிடுவதால் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது.

அவற்றால் லஸ்ஸா காய்ச்சல் (Lassa Fever), பிளேக், லெப்டோஸ்பிரோசிஸ் (Leptospirosis) போன்ற நோய்கள் மனிதர்களுக்குப் பரவி பலரும் பாதிக்கப்பட்டனர்.

பிறகுதான் பாம்புகள் இருந்திருந்தால் எலிகளைச் சாப்பிட்டிருக்கும், எலிகளால் தொல்லை இருந்திருக்காது என்பதை மக்கள் புரிந்துகொண்டனர்.

மனிதர்கள் பாம்பைக் கண்டால் இவ்வளவு தூரம் அஞ்சுவதற்குக் காரணம் அவற்றின் இரக்கமற்ற குணமே. இரைகளை வேட்டையாடுவதில் மிகவும் கொடூரமாக நடந்துகொள்ளும். வேட்டையாடி விலங்குகள் அனைத்தும் இரையைக் கொன்றுவிட்டுத்தான் சாப்பிடும்.

ஆனால், பாம்புகள் அப்படியல்ல. ஒரு முழு எருமை மாட்டையும் அது ஒன்றே, அதுவும் அப்படியே விழுங்கிவிடும்.

அதைக்கூட முழுமையாகக் கொன்றுவிடாமல் எலும்புகளை மட்டும் நொறுக்கி, சிறிது சிறிதாகத் தனது நெகிழ்வான கீழ் தாடையை விரித்து உயிருடன் விழுங்கும்.

எந்த உயிரினத்திற்குமே தான் சாப்பிடப்படுவதைக் கடைசித் துளி உயிர் பிரியும் வரை உணர்த்திவிடும் இந்தப் பாம்புகள்.

இரைகளை இவ்வளவு தூரம் இரக்கமின்றி வேட்டையாடும் இவை தனது குட்டிகளையும் விட்டுவைக்காமல் தின்றுவிடும் என்று ஒரு பேச்சுவழக்கு உண்டு.

அது முழு உண்மை அல்ல. பொதுவாகப் பாம்புகள் தனது 3 வயதில் இருந்து இணைசேர்ந்து முட்டையிடத் தொடங்கும்.

முட்டையிடும் காலம் வந்ததும், குட்டிகள் பிறந்தால் அவற்றுக்கு வேறு எந்த விலங்காலும் ஆபத்து வராத வகையில் இடத்தைத் தேர்வு செய்து அங்கே மிதமான தட்பவெப்பநிலை இருக்கும்படியாக அமைத்து முட்டையிடும்.

ஒருமுறைக்கு அதிகபட்சம் 50 முட்டைகள் வரை இடும் இவை, வேலை முடிந்ததும் அவற்றை பிறர் கண்ணில் படாதவாறு மறைத்து வைத்துவிட்டுக் கிளம்பிவிடும். முட்டைகள் பொரிந்து வெளிவரும் குட்டிகள், தனது வாழ்க்கைப் பயணத்தைச் சுயமாகப் பார்த்துக்கொள்ளும்.

சில பாம்பு இனங்கள் முட்டையிடாது, நேரடியாகக் குட்டி போடும். குட்டிகளை ஈன்றவுடன் அவற்றை விட்டு விலகிச் சென்றுவிடும். அதற்குக் காரணமும் உண்டு.

பிரசவத்திற்கு முந்தைய காலத்தின்போது எங்கும் செல்லாமல் எதையும் சாப்பிடாமல் பாதுகாப்பான ஒரு இடத்தைத் தேர்வு செய்து அங்கேயே இருந்துவிடும்.

அதனால் மிகவும் பலவீனமாக இருக்கும் இந்தப் பாம்புகள், பசியில் தனது குட்டிகளையே தின்றுவிடக் கூடாது என்பதற்காகத்தான் அவற்றை விட்டு விலகிச் சென்றுவிடும்.

விலகிச் செல்லக்கூட முடியாமல் மிகவும் பலவீனமாக இருக்கும் பாம்புகள் வேறு வழியின்றி மட்டுமே தனது குட்டிகளில் பலவீனமாக இருக்கும் குட்டிகளைச் சாப்பிடும்.

உணவுத் தேவையின் பொருட்டு, சில மிருகங்கள் அவை ஈன்றவற்றையே உண்டு விடுகின்றன. இது பாம்புகளுக்கு மட்டுமே உரித்தான குணம் அன்று.

இவை எல்லாவற்றையும் விட வித்தியாசமாக, ஆப்பிரிக்காவின் மலைப்பாம்பு இனம் ஒன்று முட்டையிடுவதோடு அவற்றை அடைகாக்கிறது.

முட்டைகள் பொரிந்து குட்டிகள் வெளிவந்த பிறகும்கூட அவற்றைப் பாதுகாத்து வளர்க்கிறது. ஆப்பிரிக்க மலைப்பாம்பு (African Python) என்றழைக்கப்படும் இது, பாதுகாப்பான வகையில் குழிதோண்டி அதனுள் சென்று முட்டையிட்டு அடைகாக்கிறது.

முட்டைகள் பொரிந்து தனது குட்டிகள் வெளிவந்ததும் அனைத்தையும் தன் உடலை வட்டமாக வளைத்து அந்த வளையத்திற்குள் வைத்துக்கொள்ளும். சாதாரணமாக பிரவுன் நிறத்தில் இருக்கும் இந்த மலைப் பாம்புகள், இந்தக் காலகட்டத்தில் கறுப்பு நிறத்திற்கு மாறிவிடும்.

பகல் நேரங்களில் தனது குழியின் வாசலில் உடலை நீட்டிப்படுத்து சூரியனின் வெப்பத்தை உள்வாங்கிக் கொள்கிறது.

இந்தக் கறுப்பு நிறத்தால் தனது உடலில் கிட்டதட்ட 40 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பத்தை உள்வாங்கிக் கொள்கிறது.

இது, அவை இறப்பதற்குத் தேவைப்படும் வெப்பத்தைவிடக் கொஞ்சம்தான் குறைவு. அப்படியிருந்தும் இவ்வளவு வெப்பத்தை அது தாங்கிக்கொள்வது எதற்காகத் தெரியுமா?

Credit-Graham_AlexanderWits_University_20151  பாசக்கார பாம்புகள் தன் குட்டிகளையே சாப்பிட காரணம் என்ன? Credit Graham AlexanderWits University 20151

இரவில் தனது குட்டிகள் உடலுக்குத் தேவையான வெப்பம் இல்லாமல் குளிரில் சிரமப்படக் கூடாது என்பதற்காக. அதாவது, இரவில் தனது குட்டிகளைச் சுற்றி வளைத்துப் படுத்துக்கொண்டு, பகலில் உள்வாங்கிக்கொண்ட வெப்பத்தை வெளியிடுவதன்மூலம் அவற்றைக் குளிர்காய வைக்கிறது.

தனது குட்டிகளைப் பாதுகாத்து வளர்க்க இவை செய்யும் முயற்சிகளின் இறுதியில் தனது உடலின் மொத்த சத்துகளையும் இழந்து பலவீனமடைவதால் சில பாம்புகள் இறந்தும் விடுகின்றன.

உயிர் பிரியும் என்று தெரிந்தாலும், தனது சத்துகளைக் கொடுத்துத் தன் குழந்தைகளைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் பெற்ற தாயன்றி வேறு எவருக்கு வரும்?

இரைகளை இரக்கமே இல்லாமல் வேட்டையாடும் இந்தப் பாம்புகள் தன் குட்டிகளிடம் எவ்வளவு கரிசனமாக இருக்கிறது பாருங்கள்; எத்தனை ஆபத்தான உயிரினமாக இருந்தால் என்ன, அந்தக் குட்டிகளுக்கு அது தாய் அல்லவா!