உள்ளக சுய நிர்ணய உரிமை மறுக்கப்பட்டால் வெளியக சுய உரிமையைக் கோர உரிமையுண்டு!! – சம்பந்தன்

உள்ளக சுயநிர்ணய உரிமை மறுக்கப்படும் சந்தர்ப்பத்தில் வெளியக சுயநிர்ணய உரிமையைக் கோரும் உரித்து ஒரு சமூகத்திற்கு உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) வலி. மேற்கு பிரதேச செயலகத்தில் அமரர். அமிர்தலிங்கத்தின் உருவச்சிலையை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், ”1986 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றை வரையில் எமக்கு சமஸ்டி முறையிலான உள்ளக சுய உரிமையின் அடிப்படையிலும் இறையாண்மையின் அடிப்படையிலும் அதி உச்ச அதிகாரப் பகிர்வை நாம் கேட்கின்றோம். அதனை நாங்கள் வாழ்ந்து வந்த பிரதேசங்களுக்கிடையில் எங்களுக்குத் தேவையென்றே கேட்கின்றோம். ஆனால் அது இன்றுவரை கிடைக்கப்பெறவில்லை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பிரகடனத்தின் அடிப்படையில் எம்மை ஆட்சி புரிவதற்கு ஒரு அரசாங்கத்திற்கு எமது சம்மதம் இருக்க வேண்டும்.

குறித்த சர்வதேச ஒப்பந்தத்தின் அடிப்படையில் நாங்கள் உள்ளக சுய உரிமையைப் பெறுவதற்கு உரித்து உண்டு.

ஆனால் அவ்வாறு சுயநிர்ணய உரிமை வழங்கப்படாவிட்டால் வெளியக சுய உரிமையைக் கோரும் உரித்து உள்ளது. அதனைத் தான் நாம் சர்வதேச சமூகத்திடமும் கோருகின்றோம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.