நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய கண்டி இனக்கலவரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
எனினும் கண்டி மாவட்டத்தின் பிரதான வீதிகளில் ஆயுதம் ஏந்திய இராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பவள் கவச வாகனங்கள் தொடர்ச்சியாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் பகலில் தலைதூக்கியிருந்த வன்முறைகள், நேற்று முன்தினம் இரவு வரையில் தொடர்ந்தது. முப்படையினரின் முழுமையான கட்டுப்பாட்டில் கண்டி கொண்டு வரப்பட்ட பின்னர், வன்முறைச் சம்பவம் எவையும் பதிவாகவில்லை.
நிலமை சுமுகமானதையடுத்து, கடும் பாதுகாப்புக்கு மத்தியில் நேற்றுக் காலை 10 மணிக்கு ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டு, மாலை 4 மணிக்கு மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.
கண்டி மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை திகன, தெல்தெனிய பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான இனக் கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. திங்கட்கிழமை மதியம் இந்த நிலமை உச்சத்துக்குச் சென்றது. பொலிஸாரால் வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலை தோன்றியது. இதனையடுத்து உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் திங்கட் கிழமை பி.ப. 3 மணிக்கு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. மறுநாள் செவ்வாய்க் கிழமை காலை 6 மணிக்கு ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டது.
கலவரக்காரர்களால் தீ வைக்கப்பட்டு எரியூட்டப்பட்ட வீட்டிலிருந்து முஸ்லிம் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டதையடுத்து மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஆங்காங்கே சிறு வன்முறைகள் தொடர்ந்தன.
செவ்வாய்க் கிழமை இரவு, வெளியிடங்களிருந்து கண்டிக்குள் நுழைந்த கலவரக்காரர்கள் சுமார் 400பேர் மீண்டும் வெறியாட்டம் நடத்தினர்.
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கும் அவர்கள் அடங்கவில்லை. ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலும், கலவரம் நேற்றுமுன்தினம் வேறு இடங்களுக்கும் பரவியது. அக்குறணை, கட்டுகஸ்தோட்டை, மடவள, அம்பத்தன்ன பிரதேசங்களிலும் முஸ்லிம்க ளுக்கு எதிரான வன்முறை தொடர்ந்தது.
இதனையடுத்து கண்டி மாவட்டத்துக்கு மேலதிக இராணுவத்தினரும், கடற்படையினரும், சிறப்பு அதிரடிப் படையினரும், பொலிஸாரும் துரிதமாக களமிறக்கப்பட்டனர். அத்துடன் சமூகவலைத் தளங்களும் நாடு முழுவதும் முடக்கப்பட்டன.
பாதுகாப்பு இறுக்கப்பட்ட பின்னர் கண்டி மாவட்டத்தில் மெல்ல மெல்ல வன்முறைகள் தணியத் தொடங்கின. பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்கள் கொள்வனவு செய்வதற்காக நேற்றுக் காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டது. பொதுமக்கள் வீதிகளில் இறங்கினர். எரியூட்டப்பட்ட தமது சொத்துக்களை முஸ்லிம்கள் பார்வையிட்டனர்.
முறுகல் நிலமை தோன்றலாம் என்று சந்தேகிக்கப்படும் இடங்களில் முப்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். ஊரடங்கு தளர்த்தப்பட்ட நேரத்தில் எதுவித அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை. கண்டி மாவட்டம் முப்படையினரின் கண்டுப்பாட்டுக்குள் முழுமையாகக் கொண்டு வரப்பட்டு நேற்று முன்னிரவு வரையிலும் எதுவித வன்முறைகளும் மீளவும் தலைதூக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
கண்டி மாவட்டத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்த முப்படையினரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ள அதேவேளை, இராணுவத்தினருக்கும், பொலிஸாருக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை மேற்கொள்வதற்கான அதிகாரியாக மேஜர் ஜெனரல் ருக்மன் டயஸ் நியமிக்கப்பட் டுள்ளார். கண்டி மாவட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ள படையினர் மற்றும் பொலிஸாருக்கு இடையில் ஒருங்கிணைப்புப் பணியை மேற்கொள்வதற்காக இந்த நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தில் 850 இராணுவத்தினரும், 128 கடற்படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், 250 இராணுவத்தினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தேவைப்பட்டால் மேலதிக படையினரை ஏனைய பகுதிகளில் இருந்து அழைக்க முடியும் என்றும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.






