இலங்கைக்கு அவமானம்! – பிரதமர் ரணில் விக்ரமசிங்க

நாட்டை சீர்குலைக்கும் சிறு தரப்பினர் மேற்கொண்ட வன்செயல்களால் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக நாட்டுக்கு ஏற்பட்டுள்ள சேதம் மிகவும் பாரதூரமானது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கண்டி அண்மித்த சில பகுதியில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்

அது மாத்திரமல்லாது சர்வதேச ரீதியாக நாடு அவமதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்திருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகினர்.

கண்டிக்கு அருகில் சில பிரதேசங்களில் நடந்த வன்முறைகளால் இலங்கையின் சுற்றுலா தொழில் துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவங்கள் சிறிய தரப்பினர் திட்டமிட்டு ஏற்படுத்திய நிலைமை. இந்த சம்பவங்கள் நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் சகவாழ்வுக்கு தடையை ஏற்படுத்தவில்லை.

30 வருடங்கள் கொடூரமான யுத்தம் காரணமாக கஷ்டங்களை அனுபவித்த மக்களுக்கு சமாதானமாகவும் சகவாழ்வுடன் வாழும் தேவையே இருக்கின்றது.

நாட்டு மக்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாப்பது அரசாங்கம் என்ற வகையில் எமது கடமையும் பொறுப்புமாகும். அதனை நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுத்துவோம்.

நாட்டின் சட்டத்தையும் அமைதியையும் பாதுகாத்து சகவாழ்வுடன் செயற்பட பங்களிப்புகளை செய்யுமாறு அனைத்து மக்களிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் அனைவரும் ஒரு நாட்டினராகவும் ஒரே இனத்தவராகவும் செயற்பட்டு இந்த துரதிஷ்டவசமான நிலைமையில் இருந்து மீள நடவடிக்கை எடுப்போம் என பிரதமர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும் உயிரிழப்புகள் மற்றும் சொத்து சேதங்களுக்கு இழப்பீடுகளை வழங்க தேவையான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் இழப்பீடுகளை துரிதமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.