ஐநா நோக்கிய ஈருருளிப் பயண சந்திப்பு!

ஆறாவது நாளாக யேர்மனிய எல்லையில் இருந்து விடுதலை வேண்டி மாவீரரின் துணையோடு   தொடர்ந்த ஈருருளிப் பயணமானது 05.03.2018 அன்று  மகளீரும் இணைந்து  கொண்டு Saarbrücken  மாநகர முதல்வரின் நிர்வாக பிரதிநிதியை  சந்தித்தார்கள்.

இச் சந்திப்பில் எமது தார்மீக விடுதலையின் அவசியம் குறித்தும் 2009ல்  நடைபெற்ற மனிதம் வெட்கிக்கும் கோர இனவழிப்பினை ஆதாரங்களோடு எடுத்துக் கூறியும் தற்போது  மாற்று வடிவம் பெற்று  தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் இனவழிப்பு முறையினையும் சுட்டிக்காட்டப்பட்டது.

எமது அறவழிப் போராட்டம் வெற்றி பெறும் எனும் வாழ்த்துச் செய்தியுடன் ஈருருளிப் பயணம்  பிரான்சு நாட்டினை சென்றடைந்தது.

நம்மைச் சோர்வடைய வைக்கும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும் எம் உறவுகள் இன்னும் ஓர்மத்துடன் மாவீரரின் கனவுகள் நிறைவேறும் முயற்சியில் தம்மாலான பங்களிப்புக்களைக் கூட மனித நேய ஈருருளிப் பயணத்தில் ஈடுபடுபவர்களுக்கு செலுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து பிரான்சு நாட்டில் Sarreguemines மாநகர முதல்வர், பாராளுமன்ற உறுப்பினரையும் Sarre-Union மேற்சபை உறுப்பினர் மற்றும் நகரபிதாவினையும் சந்தித்து எமது அறவழிப்போராட்ட   கோரிக்கை தாங்கிய மனுவும் கையளிக்கப்பட்டது. அத்தோடு Alsace  மாநில முதன்மை பத்திரிகைச் சந்திப்பும் நிகழ்ந்தது. காவல் துறையின் ஆலோசனைப் படி அவர்களின்  பாதுகாப்பு வாகனத்தோடு இம்முறை ஈருருளிப் பயணம் தொடர்ந்தது என்பது முக்கியமானது.

நாளைய தினம்  06.03.2018 செவ்வாய்க் கிழமை  அன்று மாலை 15.30 – 17.30 வரை ஐரோப்பிய நாடுகளின் ஆலோசனை மன்றம் முன்றலில் நடைபெற இருக்கும் கவனயீர்ப்புப் போராட்ட நிகழ்வில்  அனைத்து உறவுகளையும் கலந்து கொண்டு எமது பன்மையினை முன்னிறுத்தி எம்மை நாம் வலுப்பெறச் செய்ய ஒன்றுகூடுமாறு உரிமையோடு அழைத்து நிற்கின்றோம்.