
`நான் செஞ்சது தவறுதான்…’ என்று பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்களிடம் தலைமை ஆசிரியர் மன்னிப்புக் கேட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவி நித்யாவிடம் (பெயர் மாற்றம்) பள்ளி தலைமை ஆசிரியர் பாலன், தவறாக நடந்ததாக நித்யாவின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். தகவலறிந்து அங்குவந்த போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாணவியின் அம்மா வீரலட்சுமி (பெயர் மாற்றம்), போலீஸ் அதிகாரி ஒருவரின் காலில் விழுந்து, நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்தார். இதையடுத்து, போலீஸார், பள்ளி தலைமை ஆசிரியர் பாலனை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். விசாரணை முடிந்து பாலனை, துரைப்பாக்கம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மாணவியின் பெரியம்மா கற்பகத்திடம் பேசினோம். “நள்ளிரவில் எழுந்த என்னுடைய மகள் திடீரென கதறி அழுதாள். அதைக்கேட்டு என்னுடைய தங்கை எழுந்து அவளிடம் விசாரித்துள்ளார். அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தோம். தலைமை ஆசிரியர் பாலனால் அவள், மனதளவிலும் உடல் அளவிலும் பாதிக்கப்பட்டிருப்பதைப் பார்த்துதான் போலீஸ் நிலையத்துக்குச் சென்றோம். அங்கு நீதி கிடைக்காததால் பள்ளிக்குச் சென்றோம். போலீஸ் காலில் விழுந்தப்பிறகுதான் பாலனை விசாரணைக்காகப் போலீஸார் அழைத்துச் சென்றனர். துரைப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடந்தபோது, தலைமை ஆசிரியர் பாலன் எங்களிடம், ‘நான் செஞ்சது தவறுதான், மன்னித்துக்கொள்ளுங்கள்’ என்று கூறினார். ஆனால், அவர் செய்த காரியத்தை எங்களால் மன்னிக்க முடியவில்லை. நாங்கள் கொடுத்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கும்படி உறுதியாக இருந்தோம். அதன்பிறகே போலீஸார் பாலனைக் கைது செய்துள்ளனர். பாலன்மீது போலீஸார் எடுத்த நடவடிக்கையால் மாணவிகள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது” என்றார் ஆவேசமாக.
போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், `பாலனிடம் விசாரணை நடந்த சமயத்தில் எங்களுக்கு சிலரிடமிருந்து பிரஷர் வந்தது. ஆனால், அதை நாங்கள் பொருட்படுத்தவில்லை. மாணவி தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின்அடிப்படையில் பாலனைக் கைது செய்துள்ளோம். இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்றும் விசாரணை நடந்துவருகிறது’ என்று தெரிவித்தன.






