ஜனாதிபதி மைத்திரியின் அதிரடியால் கதி கலங்கும் செயலகம்!

ஜனாதிபதி ஊடக பிரிவை சுத்தப்படுத்தும் நடவடிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி பிரிவின் மேலதிக ஊடக செயலாளராக செயற்பட்ட நிமல் போபகே அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் ஊடகப் பிரிவின் ஆலோசகராக செயற்பட்ட பிரபல ஊடகவியலாளர் மற்றும் செய்தி வாசிப்பாளரான ஏ.பீ.லலித் டி சில்வா அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவில் தனக்கான வேலை ஒன்றும் இல்லை எனவும், அங்கு இருப்பதில் எவ்வித பிரயோசனமும் இல்லை எனவும் ஏ.பீ.லலித் டி சில்வா கடிதம் மூலம் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தினார். இதனையடுத்து அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

லலித் என்பவர் நுகேகொடையில் அமைந்துள்ள ஹோட்டல் முகாமைத்துவ பாடசாலையின் உரிமையாளராகும்.

ஜனாதிபதி ஊடக பிரிவின் புகைப்பட பிரிவில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.

அந்தப் பிரிவில் இடம்பெறும் மோசடிகள் குறித்து அமைச்சர் ஒருவரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

அண்மைக்காலமாக கொழும்பு அரசியல் தளத்தில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதியின் அதிரடியான செயற்பாடு குறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது.