தமிழகத்திலுள்ள உத்திரமேரூர் அருகே உள்ள பாலேஸ்வரத்தில் ஆதரவற்றர்களுக்கான கருணை இல்லம் செயல்பட்டு வருகிறது.கடந்த 2 நாட்களுக்கு முன்பு கருணை இல்லத்துக்கு சொந்தமான வேனில் காய் கறி மூட்டையுடன் இரும்புலியூர் இல்லத்தில் இறந்த விஜயகுமார் என்பவரது உடல் இந்த கருணை இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது.அப்போது அதே இல்லத்தில் தங்கி இருந்த செல்வராஜ் (72) அன்னம்மாள் (74) ஆகியோரையும் அதே வேனில் பிணத்துடன் அழைத்து வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பொது மக்கள் அந்த வேனை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மேலும் பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்தில் இறக்கும் முதியோர்களின் உடல் பதப்படுத்தப்பட்டு எலும்புகளை தனியாக பிரித்து வெளிநாட்டில் விற்பதாக குற்றம் சாட்டினர்.
இதையடுத்து காஞ்சீபுரம் கோட்டாட்சியர் ராஜி உள்பட 6 துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்தில் ஆய்வு செய்தனர். இதில் பல்வேறு விதி மீறல்கள் இருப்பது தெரியவந்தது.கருணை இல்லத்தின் அனுமதி கடந்த நவம்பர் மாதத்துடன் முடிவடைந்து விட்டது. மேலும் ஒவ்வொரு மாதமும் சுமார் 40 முதல் 50 முதியோர் மர்மமான முறையில் இறப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 60 முதியோர்கள் இறந்து இருந்தனர். அவர்களை பற்றிய முறையான விபரங்கள் கருணை இல்ல நிர்வாகிகளிடம் இல்லை.கருணை இல்லத்தின் பின்பகுதியில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் பெரிய பிண அறை உள்ளது. சுவற்றில் இருக்கும் சிறுசிறு பெட்டி போன்ற அறைகளில் இறந்தவர்களின் உடல்களை சிமெண்டு போட்டு மூடி விடுகின்றனர்.
மர்மமான முறையில் உடல் அடக்கம் செய்யப்படுவதால் அதில் இருந்து எஞ்சும் எலும்புகள் கடத்தப்படலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளன.இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்கள் அங்கு புதைக்கப்பட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.இறந்தவர்கள் பற்றி முறையான விபரம் இல்லாததால் இதுபற்றிய முழுமையான தகவல் அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை. எனவே எத்தனை பேர் இறந்தனர்? எவ்வாறு உடல் அடக்கம் செய்யப்பட்டது? என்ற விபரத்தை சேகரிக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்த கருணை இல்லத்தில் 350க்கும் மேற்பட்ட முதியோர் உள்ளனர். 50ற்க்கும் மேற்பட்ட பல்வேறு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி உள்ளனர். இது பற்றிய அறிக்கை மாவட்ட நிர்வாகத்திடம் கொடுக்கப்படும்.கருணை இல்லத்தில் தங்கி இருக்கும் பலர் வெளியில் செல்வதாக கூறினர். பெரும்பாலானோருக்கு எங்கு செல்வது என்று தெரியவில்லையெனவும் இல்ல மேலதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.