உதவிக்கு வந்தான்; அக்காவை வீடியோ எடுத்தான்!

“கூட்டத்தில் ஒருத்தியாக அல்ல, இனி கூட்டமாக உடைத்துப் பேசுவோம். ‘இவன்தான் செய்தான்’ என்று கைகாட்டுவோம். ‘இப்படிச் செய்தான்’ என்று கரிபூசுவோம். இனி தீர்வை எதிர்நோக்க வேண்டாம், தீர்ப்பை எழுதுவோம் நாமே!

என் அக்கா கணவரின் உறவுக்காரப் பையன் அவன். கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறான். என் அக்காவிடம் மிகவும் அன்பாக இருப்பான். புதிதாகத் திருமணமாகிச் சென்றிருந்த என் அக்காவுக்கு, ஆன்லைனில் இ.பி பில் கட்டுவதிலிருந்து அவசரத்துக்கு மாத்திரை வாங்கிவந்து கொடுப்பதுவரை அவள் சொல்லும் வேலைகளையெல்லாம் செய்துகொடுப்பான்.

ஆபாசமாக வீடியோ

கல்லூரி முடிந்த மாலை நேரங்கள், விடுமுறை தினங்கள் என அக்காவை அவ்வப்போது வந்து பார்த்துச் செல்வான். ஒருமுறை என் செமஸ்டர் விடுமுறையில் என் அக்கா வீட்டுக்குச் சென்றிருந்தபோது, அக்கா அவனை எனக்கு அறிமுகப்படுத்தினாள். “உன்ன மாதிரிதான்… எப்போ பார்த்தாலும் மொபைலும் கையுமா இருப்பான்” என்றாள். அன்று என் அக்கா வீடு கூட்டிக்கொண்டிருந்தாள். இவன் மாடிப்படியில் கையில் மொபைலுடன் அமர்ந்திருந்தான். நான் மேலே மாடியிலிருந்து இறங்கிவந்ததை அவன் கவனிக்கவில்லை. ஆனால், அவன் மொபைலில் என் அக்காவை, நைட்டி க்ளீவேஜுடன் அவன் வீடியோ எடுத்துக்கொண்டிருந்ததை நான் கவனித்துவிட்டேன். அதிர்ந்த நான், ஆத்திரத்துடன் படி இறங்கிவந்த வேகத்தில், அவன் மொபைலைப் பறித்துவிட்டேன். அவன் அதிர்ந்து, மொபைலைக் கேட்கும் திராணியற்று அவசரகதியில் எழுந்து ஓடினான். லாக் போட்டிருந்ததால் கேலரி செல்ல முடியவில்லை. ஆனால், மெமரி கார்டை எடுத்து என் மொபைலில் போட்டுப் பார்த்தேன். சமைக்கும்போது, டிவி பார்க்கும்போது, துணி காயப்போடும்போதெல்லாம், ஆபாச கோணங்களிலும், விலகிய துப்பட்டா, புடவையுடனும் என் அக்காவை அவன் புகைப்படங்களும் வீடியோக்களுமாக எடுத்து வைத்திருந்ததைக் கண்டு அதிர்ந்தேன். அக்காவுக்கோ ஒரே அழுகை. “இதை யாரிடமும் சொல்ல வேண்டாம்” என்றாள் அக்கா. ஆனால், நான் விடுவதாக இல்லை. மறுநாள் அவளை அழைத்துக்கொண்டு, அவன் வீட்டுக்குச் சென்று, அவன் அம்மாவிடம் அவர் மகன் செய்த வேலையைச் சொல்லி, புகைப்படங்கள், வீடியோக்களையும் காட்டினோம். அதற்குப் பின் அவன் எங்கள் வீட்டுப் பக்கம் வருவதில்லை. இனி இன்னொரு பெண்ணிடம் வாலாட்டாமல் இருப்பான் என்றும் நம்புவோமாக.