ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்ளவில்லையென நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு, தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக பிரதமரை பதவி நீக்குமாறு சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் பகிரங்கமாக அமைச்சரவையில் கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலைத் தொடர்ந்து பிரதமரை பதவி விலகுமாறு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது. எனினும், நாட்டின் நன்மை கருதி ரணிலை பிரதமராகக் கொண்டு தேசிய அரசாங்கத்தைக் கொண்டுசெல்ல சுதந்திரக் கட்சியினர் இணங்கியதாக நேற்றைய தினம் நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டது. எனினும், தேசிய அரசாங்கத்தை நீடிப்பது தொடர்பாக தொடர்ந்தும் சிக்கல் நிலையே காணப்பட்டு வருகின்றது.
இதேவேளை, நேற்று முன்தினம் ஜனாதிபதியை பிரதமர் ரணில் சந்தித்த பின்னர் அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் ஜனாதிபதியை சந்தித்தார். இதன்போது பிரதமரை பதவி நீக்குமாறு அவர் கோரியிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு எங்கும் செல்லமாட்டேன் எனக் குறிப்பிட்டு அக்கட்சியின் நம்பிக்கைக்கு பாத்திரமாக செயற்பட்ட தயாசிறி, கடந்த 2013ஆம் ஆண்டு சுதந்திரக் கட்சியுடன் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.






