தமிழ்த் தேசியப் பேரவை சார்பாக யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் வேட்பாளராக சட்டத்தரணி மணிவண்ணனை நாம் களமிறக்க உள்ளோம்.எமது கட்சியைத் தவிர்ந்து ஏனைய கட்சிகள் மாநகர சபையில் பெரும்பான்மையை நிரூபித்தால் நாம் அவர்களுக்குப் பக்கபலமாக இருப்போமே தவிர குழப்பமாட்டோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் வேட்பாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆனோல்ட்டை தெரிவு செய்துள்ளது என்று அறிந்தேன்.
எமக்கும் ஆனோல்ட்டுக்கும் தனிப்பட்ட ரீதியில் எந்த முரண்பாடுகளும் இல்லை. அவர் தேர்தலின் போது மத ரீதியாக சில விடயங்களை செய்தார். எமது மக்களை பிளவுபடுத்தும் செயலாகவே அதை நாம் பார்த்தோம்.வடக்கு மாகாண சபையில் உறுப்பினராக அவர் இருந்தபோது தமிழ் மக்களால் போற்றப்படும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராகப் பல சதிகளை மேற்கொண்டிருந்தார்.
தனது எஜமானான சுமந்திரனின் அறிவுறுத்தலுக்கு அமையவே அவற்றை மேற்கொண்டார் என்பதை அனைவரும் அறிவார்கள். இவரின் இப்படியான செயற்பாடுகள் தனிப்பட்ட பிரச்சனைகள் அல்ல. ஒட்டு மொத்த தமிழ் மக்களின் பிரச்சனை ஆகும்.யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு அவர் பதவிக்கு வந்து தனது பெரும்பான்மையை காட்டினால் நாம் அவருக்கு பக்கபலமாக இருப்போம்.
நாம் அவரின் நிர்வாகத்துடன் பொறுப்புடன் செயற்படுவோம். அவரது கட்சியிலும் ஏனைய கட்சியிலும் உள்ள பல வேட்பாளர்கள் எமக்கு ஆதரவு தருவோம் என்று கூறியுள்ளனர். யார் பெரும்பான்மையை நிருபிக்கின்றர்களோ அவர்கள் நிர்வாகத்தை நடத்த வேண்டும்.
நாம் ஆரம்பத்தில் ஐந்து உள்ளுராட்சி சபைகளை நிர்வகிப்பது என தீர்மானித்து இருந்தோம். இப்போது எமக்கு ஆதரவு பெருகி வருவதால் நாம் மேலும் பல சபைகளை நிர்வகிப்பது தொடர்பாக முயற்சித்து வருகின்றோம். எனவும்தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்துள்ளார்.






