இறந்தவரின் குடும்பத்திற்கு 4.5 கோடி ரூபா நஷ்ட ஈடு!!

ஜப்பானில் விபத்தில் ஊழியர் ஒருவர் இறந்ததற்கு கூடுதல் பணிச்சுமைதான் காரணம் எனக்கூறி 4.5 கோடி ரூபா நஷ்ட ஈடு வழங்க அவர் பணிபுரிந்த நிறுவனத்துக்கு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் இயங்கி வரும் நிறுவனம் க்ரீன் டிஸ்ப்ளே. அந்நிறுவனத்தில் பணி புரிந்து வந்தவர் கோடா வதனாபே என்கிற இளைஞர் கடந்த 2014ம் ஆண்டு இரவுப்பணி முடித்து வீடு திரும்பும் போது சாலை விபத்தில் உயிரிழந்தார்.

இது குறித்து கோடாவின் தாயார் 2015ம் ஆண்டு மகனின் மரணத்திற்கு இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில் இரவுப்பணி முடித்து விட்டு வரும்போது விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த போது கரோஷி என்று சொல்லிவிட்டு இறந்தார்.ஜப்பானிய மொழியில் கரோஷி என்றால் அதிக வேலை என்று பொருள். இதனால் மகன் மரணத்திற்கு காரணம் அவர் பணிபுரிந்த நிறுவனம் தான். அதனால் சம்பந்தப்பட்ட நிறுவனம் இழப்பீடு தர வேண்டும் என்று கோரி இருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை சமீபத்தில் முடிவடைந்தது. இதில் தீர்ப்பளித்த நீதிபதி ஜப்பானில் தற்போது இது போன்ற மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்குக் காரணம் வேலைப் பளு அதிகம் தரும் நிறுவனங்கள் தான் என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். ஊழியர்களுக்கு தகுந்த இடைவெளியுடன் கூடிய வேலைநேரத்தை அமுல்ப்படுத்தவேண்டும். விபத்தில் உயிரிழந்த கோடாவின் குடும்பத்துக்கு 76 மில்லியன் யென் இழப்பீடாக வழங்கவேண்டும் என தீர்ப்பளித்தார்.இதையடுத்து கிரீன் டிஸ்ப்ளே நிறுவனம் கோடாவின் குடும்பத்திற்கு நீதிபதி குறிப்பிட்ட இழப்பீட்டுத் தொகையினை வழங்கியுள்ளது.