“பல்லவன்” (Pahlavan) என்றால் பண்டைய ஈரானிய மொழியில் நாயகர்கள் என்று அர்த்தம்.
தமிழகத்தை ஆண்ட பல்லவர்கள், உண்மையில் ஈரானில் இருந்து வந்த வெள்ளையினத்தவரே! தமிழர் என்பது இனக்கலப்படைந்த சமுதாயம் என்பதற்கு மேலும் ஒரு சான்று.
கல்கி எழுதிய சிவகாமியின் சபதம் என்ற “சரித்திர” நாவலில் பல்லவ மன்னர்களை தமிழர்களாக சித்தரித்து எழுதி இருப்பார்.
இன்றைக்கும் பெருமளவில் விற்பனையாகும் கல்கியின் நாவல்கள், ஒரு வகையில் தமிழினவாத அரசியலை ஊக்குவிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
கல்கியின் எழுத்துக்கள் ஏற்படுத்திய தாக்கத்தால், “பல்லவர்கள் தமிழர்களே” என்று நம்புவோர் பலருண்டு.
அவ்வாறான கற்பிதத்தை உருவாக்குவதில், ஒரு பிராமணரான கல்கிக்கு அரசியல் நோக்கங்கள் இருந்திருக்கலாம்.
இன்றைய தமிழகப் பிராமணர்களில் ஒரு பிரிவினர் ஈரானில் இருந்து புலம்பெயர்ந்து வந்திருக்கலாம்.
அந்த உண்மையை மூடி மறைத்து, பிராமணர்களும் தமிழர்களே என்று உறுதிப் படுத்துவதற்கு கல்கி போன்ற அறிவுஜீவிகள் பாடுபட்டுள்ளனர்.
பல்லவர்கள் தமிழ் நாட்டின் ஒரு பகுதியை ஆண்டாலும், அவர்களது ராஜ்ஜியத்தின் உத்தியோகபூர்வ மொழி சமஸ்கிருதமாக இருந்தது.
பல்லவ மன்னர்கள் தமது பெயர்களுக்குப் பின்னால் சூட்டிக் கொண்ட “வர்மன்” என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். அதன் அர்த்தம் பாதுகாவலன்.
வர்மன் என்ற பெயரைக் கண்டதும், பலர் அறியாமை காரணமாக, “பல்லவர்கள் தமிழ் மன்னர்கள்” என்று நினைக்கிறார்கள்.
வர்மன் என்ற பெயர் கொண்டிருந்த படியால், கம்போடியாவை ஆண்ட மன்னர்களும் தமிழர்களே என்று தவறாக நினைப்பவர்கள் பலருண்டு.
இது ஒரு தப்பெண்ணம். அதில் எந்த உண்மையும் இல்லை. அந்த கம்போடிய அரச பரம்பரையினரும் பல்லவர்களில் இருந்து வந்தவர்களே. ஆனால், தமிழர்கள் அல்ல.
யார் இந்தப் பல்லவர்கள்? எவ்வாறு தமிழகத்திற்கு வந்தார்கள்? தமிழர் என்றால் யார்? இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க வேண்டும்.
தமிழில் பல்லவர்கள் பற்றிய வரலாற்று நூல்களை எழுதிய சரித்திர ஆசியர்கள் “பல்லவர்களின் பூர்வீகம் பற்றி எதுவும் தெரியவில்லை” என்று எழுதியுள்ளனர்.
அது உண்மை அல்ல. அவர்களுக்கு பல்லவர்கள் யார் என்பது தெரியும். அவர்களது பூர்வீகம் ஈரான் என்பதும் தெரிந்த விடயம் தான்.ஆனால் சொல்லத் தயங்குகிறார்கள்.
அந்த உண்மையை சொல்ல விடாமல் சரித்திர ஆசிரியர்களை தடுப்பது எது? இருபதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் அறிமுகப் படுத்தப் பட்ட தமிழ்த் தேசியக் கோட்பாடு அதைக் கூற விடாமல் தடுக்கிறது.
அதற்கு முன்னர் தமிழர் என்ற இன உணர்வு யாரிடமும் இருக்கவில்லை. “தமிழர்கள் ஒரே மாதிரியான, கலப்படையாத, தூய்மையான இனம்” என்பது ஒரு கற்பிதம்.
உலகில் உள்ள எல்லா தேசியவாதிகளும், இது போன்ற கற்பனையான வரலாற்றை உருவாக்கி வைத்திருப்பார்கள்.
பண்டைய ஈரானை ஆண்ட அரச வம்சங்களில் ஒன்று “பஹ்லவி”. இந்தியாவில் அவர்களை பல்லவன் என்று அழைத்தனர்.
பஹ்லவி அரச வம்சத்தினர் பார்த்திய இனத்தை சேர்ந்தவர்கள். வட மேற்கு ஈரானில் வாழ்ந்த பார்த்தியர்கள், ஒரு காலத்தில் ஈரானில் பெரியதொரு சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பினார்கள்.
ஈரானில் இன்னொரு மூலையில் வாழ்ந்த பார்சியர்கள் என்பது வேறு இனம். ஆனால், இனக்கலப்பு காரணமாக காலப்போக்கில் பார்த்திய, பார்சிய மொழிகள் ஒன்றாகி, பின்னர் அது அரபிச் சொற்களை உள்வாங்கி நவீன பார்சி மொழி உருவானது.
இருப்பினும் அது ஒரு ஆரிய மொழி என்பதால், சமஸ்கிருதத்துடன் நெருங்கிய தொடர்புடையது.
இதனால், ஈரானிய பார்த்திய வம்சாவளியினரான பல்லவர்கள், தமிழ்நாட்டுக்கு வந்த பின்னர் சமஸ்கிருதம் பேசியதில் ஆச்சரியப் பட எதுவும் இல்லை.
ஈரானியர்களும், இந்திய ஆரியர்களும் பொதுவான மூதாதையரில் இருந்து பிரிந்து சென்ற கிளைகள் தான்.
இன்றைக்கும் ஈரான் என்ற பெயரின் பொருள் “ஆரியர்களின் நாடு” என்பது தான். இந்திய – ஈரானிய ஆரியர்களின் மூதாதையர் குறைந்தது பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னர் கவ்காசியா அல்லது சைபீரியாவில் (இன்று ரஷ்யாவுக்கு சொந்தமானது) இருந்து புலம்பெயர்ந்து வந்திருக்கலாம்.
காலப்போக்கில் அவர்களுக்குள் பல மொழிகள், இனங்கள் தோன்றியுள்ளன. இவை ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டாலும், அந்நிய படையெடுப்புகளால் புலம்பெயர்ந்து புதிய இனமாகவும் மாறியுள்ளன.
ஈரானிலிருந்து தென்னிந்தியா வரையிலான தொடர்ச்சியான இடப்பெயர்ச்சி காரணமாக பல்லவர்கள் இந்தியத் தன்மை கொண்ட புதிய இனமாக உருமாறி இருந்தனர்.
உலகை வெல்ல நினைத்த கிரேக்க அலெக்சாண்டர் இந்தியா வரையில் வந்த வரலாறு அனைவரும் அறிந்ததே.
ஆனால், அலெக்சாண்டர் மறைவுக்குப் பிறகு என்ன நடந்தது என்ற விபரம் வரலாற்று நூல்களில் காண்பதரிது.
குறிப்பாக தமிழில் உள்ள சரித்திர நூல்களில் அதைப் பற்றி ஒரு குறிப்புக் கூட காணக் கிடைக்காது. சிலநேரம், வேண்டுமென்றே இப்படியான இருட்டடிப்புகள் செய்யப் படுவதாக தோன்றுகிறது.
சங்ககால தமிழ் இலக்கியத்தில் கிரேக்கர்களை யவனர்கள் என்று குறிப்பிடுகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஆனால், யவனர்கள் கடலோடிகளாக கப்பலில் வந்த வணிகர்கள் என்று தான் பலர் கருதுகிறார்கள்.
அது ஒரு பக்கச் சார்பான உண்மை மட்டுமே. அவர்களுக்கு மறுபக்க வரலாறு தெரியாது. இன்றைய ஆப்கானிஸ்தானில் இருந்து தரைவழியாக வந்து தமிழ்நாட்டில் குடியேறிய யவனர்களும் இருந்தனர். அதைப் பற்றி இங்கே பார்ப்போம்.
அலெக்சாண்டர் மறைவுக்குப் பின்னர் அவர் கைப்பற்றி இருந்த அகண்ட நிலப்பரப்பு பல துண்டுகளாக பிரிக்கப் பட்டது.
இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பஞ்சாப், காஷ்மீர் ஆகிய பகுதிகள் ஒரு குடையின் கீழ் தனியான ராஜ்ஜியமானது. அதற்கு அலெக்சாண்டரின் முன்னாள் தளபதிகளில் ஒருவர் மன்னராக முடிசூட்டிக் கொண்டார்.
பக்டீரியா என அழைக்கப்பட்ட அந்த ராஜ்ஜியம், “சத்ரபதிகள்” என்ற கிரேக்க மொழி பேசும் ஆளுநர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது.
அவர்கள் உள்நாட்டு (இந்திய) கலாச்சாரங்களை பின்பற்றினார்கள். பௌத்த மதத்தை தழுவிக் கொண்டனர்.
கிரேக்க, ஈரானிய, இந்திய கலாச்சாரங்கள் ஒன்று கலந்து, தனித்துவமான புதியதொரு கலாச்சாரம் உண்டானது. அது இன்று வரைக்கும் நாம் காணும் “இந்திய கலாச்சாரத்தின்” ஒரு பகுதியாக உள்ளது.
இதற்கிடையே அலெக்சாண்டரின் மறைவுக்குப் பின்னர் தலையெடுத்த ஈரானிய பார்த்தியர்களும் (பல்லவர்கள்), கிரேக்க சத்ரபதிகளும் போரிட்டுக் கொண்டனர்.
பண்டைய காலத்து யுத்தங்கள் எதுவுமே இனம், மொழி சார்ந்து நடக்கவில்லை. யாராவதொரு மன்னரின் ராஜ்ஜிய விஸ்தரிப்புக்காக போர்கள் நடந்திருக்கும்.
அந்த வகையில் நாம் இதை கிரேக்க – ஈரானிய போராக கருத முடியாது. அந்தக் காலத்தில் வாழ்ந்த யாருக்கும் மொழி, இன உணர்வுகள் இருக்கவில்லை.
கிரேக்க, பார்த்திய ராஜ்ஜியங்களுக்கு வடக்கில் இருந்து ஆபத்து வந்தது. ஷாகா என்ற இன்னொரு ஆரிய இனம், வடக்கே இருந்து படையெடுத்து வந்தது.
இன்றைய உஸ்பெகிஸ்தான் பிராந்தியத்தில் இருந்து வந்த ஷாகா இனத்தவர்கள், ஈரானில் பெரும்பகுதியை ஆக்கிரமித்தனர்.
அதுவரை காலமும் அங்கு ஆதிக்கம் செலுத்தி வந்த பார்த்தியரும், கிரேக்கரும் பின்வாங்கி இந்தியாவுக்கு சென்றனர். இன்றைய இந்தியாவின் பஞ்சாப், குஜராத் மாநிலங்களில் புதிய ராசதானிகளை அமைத்துக் கொண்டனர்.
இதே நேரம், சீனாவில் சீனப் பெருஞ்சுவர் கட்டப் பட்டுக் கொண்டிருந்தது. அது மேற்கு நோக்கி விரிவாக்கப் பட்டது. அந்தப் பிரதேசத்தில் அரசாண்ட யுயே சி என்ற இனம், சீனர்களால் தெற்கு நோக்கி அடித்து விரட்டப் பட்டது.
சீனர்களால் யுயே சி அல்லது இந்தியர்களால் குஷான் என அழைக்கப் பட்ட இனத்தவர்கள், இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பிராந்தியத்தில் புதிய ராஜ்ஜியத்தை அமைத்தனர். இதனால் அங்கு வாழ்ந்த ஷாகா இனத்தவர் தெற்கு நோக்கி புலம்பெயர்ந்தனர்.
கி. பி. முதலாம் நூற்றாண்டில், மேற்கு இந்தியாவில் உள்ள குஜராத் பகுதியில் உருவான பல்லவ ராஜ்ஜியத்தில், கிரேக்க, பார்த்திய, ஷாகா ஆகிய ஆரிய இனத்தவர்கள் ஒன்று கலந்து, புதியதொரு வெள்ளையினம் உருவாகி இருந்தது.
அவர்களே தமிழகத்து பல்லவர்களின் மூதாதையர். குஜராத்தில் கால்பதித்திருந்த பல்லவர்கள், கி.பி. மூன்றாம் நூற்றாண்டளவில் தென்னிந்தியா நோக்கி படையெடுத்து சென்றனர்.
வட தமிழகத்தில் உள்ள தொண்டை மண்டலத்தை கைப்பற்றி, அங்கு மாமல்லபுரத்தை தலைநகராகக் கொண்ட பல்லவ ராஜ்ஜியத்தை அமைத்தனர்.
மாமல்லபுரத்தை தலைநகராகக் கொண்ட பல்லவ நாட்டை ஆண்ட மன்னர்களும், படையினரும் தமிழர்கள் அல்ல. அவர்கள் இனத்தால் வெள்ளையர்கள்.
அதாவது, பார்த்திய, ஷாகா, கிரேக்கர்களும் கலந்த வெள்ளையினம். அவர்கள் எப்படி தமிழர் ஆனார்கள்? பிற்காலத்தில், அந்நிய படையெடுப்புகள் காரணமாக பல்லவ ராஜ்ஜியம் அழிந்து போனாலும், பல்லவர்களின் வழித்தோன்றல்கள் தமிழ்நாட்டில் தங்கி விட்டிருப்பார்கள். அவர்கள் காலப்போக்கில் தமிழ் பேசி தமிழர்களாக மாறி விட்டனர்.
மேலே குறிப்பிடப் பட்ட வரலாற்று நிகழ்வுகளும், இனக்கலப்புகளும் நடப்பதற்கு ஐநூறு வருடங்கள் எடுத்திருக்கலாம். நமது கால அளவீட்டின் படி கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கும், கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கும் இடைபட்ட காலத்திற்குள் நடந்த மாற்றங்கள் இவை.
அந்தக் காலங்களில் யார் என்ன மொழி பேசுகிறார்கள் என்றெல்லாம் யாரும் கவலைப் படவில்லை.
“இனம்” என்ற கருதுகோள் அப்போது இருக்கவில்லை. அது காலனிய காலத்தில் உருவான நவீன அரசியல் கோட்பாடு.
குஜராத்தில் ராஜ்ஜியம் அமைத்த பல்லவர்களுக்கு, கிழக்கே இருந்து ஆபத்து வந்தது. அப்போது வட இந்தியாவில் குப்தர்களின் சாம்ராஜ்யம் விரிவடைந்து கொண்டிருந்தது.
நீண்டதொரு போருக்குப் பின்னர், குப்தர்கள் குஜராத் பல்லவர்களின் ராஜ்ஜியத்தை கைப்பற்றினார்கள். கி.பி. 375 ம் ஆண்டு, குப்தர்களின் சாம்ராஜ்யம் தெற்கு நோக்கி விரிவடைந்தது.
தொண்டை மண்டலத்தில் இருந்த பல்லவ நாடும் குப்தர்களிடம் வீழ்ந்தது. அப்போது பல்லவ அரச வம்சத்தினர் (மட்டும்) கப்பல்களில் தப்பிச் சென்று, தூர கிழக்காசிய நாடுகளை சென்றடைந்தனர். அவர்களே கம்போடியாவில் புதியதொரு அரச வம்சத்தை உருவாக்கினார்கள்.
கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில், குப்த சாம்ராஜ்யம் பலவீனமடைந்த காலத்தில், பல்லவர்கள் மீண்டும் தலையெடுத்தனர். காஞ்சிபுரத்தில் மீண்டும் ஒரு பல்லவ நாடு தோன்றியது.
தமிழக வரலாற்றில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து, ஏழாம் நூற்றாண்டு வரையில் “பல்லவர்களின் பொற்காலம்” எனலாம்.
அந்தக் காலத்தில், கம்போடியா, வியட்நாம், இந்தோனேசியா போன்ற தூர கிழக்காசிய நாடுகளில் தோன்றிய பல்லவர்களின் ராஜ்ஜியங்களுக்கும், தமிழகத்து பல்லவ நாட்டிற்கும் இடையில் கப்பல் போக்குவரத்து இருந்தது. அதன் விளைவாக சர்வதேச வாணிபம் வளர்ச்சி கண்டது.
தமிழகத்து பல்லவ நாட்டின் ஆட்சியாளர்களில் சிலர் அப்போதும் கிரேக்க மொழி பேசுவோராக இருந்திருக்கலாம்.
ஆகையினால், ஐரோப்பிய கிரேக்கர்களுடனும் வணிகத் தொடர்பு ஏற்பட்டது. உண்மையில், இன்றைய சர்வதேச வணிகம் எப்படி நடக்கிறதோ, அப்படித் தான் அன்றைய வணிகப் போக்குவரத்தும் அமைந்திருந்தது. அதாவது, ஐரோப்பிய கிரேக்கர்களின் வணிகக் கப்பல்கள் தமிழ்நாட்டு சந்தையில் தமது பொருட்களை விற்றனர், அல்லது வாங்கினர்.
அதே மாதிரி தூர கிழக்காசிய வணிகர்ளும் தமிழகத்திற்கு வந்து சென்றனர். இந்த வணிகத் தொடர்பு பண வருமானத்தை மட்டும் கொண்டு வரவில்லை.
அறிவியலும் வளர்ந்திருக்கும். அதே நேரம், அந்நிய நாடுகளை சேர்ந்தவர்கள் தமிழர்களுடன் ஒன்று கலந்திருப்பார்கள்.
உலகில் இனக் கலப்பில்லாத எந்த இனமும் நாகரிகம் அடைந்ததாக வரலாறு இல்லை. ஆகவே, தமிழர்களும் இனக்கலப்பு காரணமாகத் தான் நாகரிக வளர்ச்சி கண்டனர். அது இயற்கையானது.
பிற்குறிப்பு:
– இந்தக் கட்டுரை எழுதுவதற்கான ஆதாரங்களை பின்வரும் நூலில் இருந்து எடுத்துள்ளேன்: Early Kingdoms of the Indonesian Archipelago and Malay Peninsula, Paul Michel Munoz
– மேலே உள்ள படமும் அந்த நூலில் இருந்து எடுக்கப் பட்டதே.