எமது நாட்டின் அரசியல் சூழ்நிலை தற்போது திரைப்படம் போன்று இடைவேளை முடிந்து நாளொரு அதிரடி முடிவுகள், தகவல்கள் என்ற விதத்தில் நகர்ந்து கொண்டிருக்கின்றது.
பொதுவாக ஒரு ஆட்சித் தரப்பின் நிர்வாகம் முடிவடைந்த பின்னரே அந்த ஆட்சியை நடத்திய கட்சியின் நிர்வாக வேளையில் இடம்பெற்ற முறைகேடுகள், ஊழல், லட்சம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்படுவது வழக்கம்.
ஆனால் இவற்றுக்கெல்லாம் முற்றிலும் மாறுபட்ட வகையில் இலங்கையில் ஒரு ஆட்சித் தரப்பின் நிர்வாகம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே அவர்களின் ஊழல், முறைகேடுகள் விசாரிக்கப்படும் வினோதம் இடம்பெற்று வருகின்றது.
இரு துருவங்களாக இருந்த இருபெரும் தேசியக் கட்சிகள் தம்மிடையே ஒன்றிணைந்து ஆட்சி அமைத்த போதிலும், கடந்த மூன் றாண்டுகள் ‘தேனிலவு’ கொண்டாடிய ஆட்சியாளர்கள், மத்திய வங்கி பிணைமுறி ஊழல் என்ற சுழலில் அகப்பட்டு சின்னாபின்னப்படுகின்றனர்.
கடும் வார்த்தைப் பிரயோகங்கள், அடிதடி என நாடாளுமன்றம் போர்க்களமாகி, நோயாளர் காவு வண்டியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைத்தியசாலைக்கு இட்டுச் செல்லப்படும் அளவுக்கு தேசிய அரசு ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது.
ஜனாதிபதியைப் பொறுத்தவரை ‘‘மடியில் கனமில்லை. எனவே வழியில் பயமுமில்லை’’ என்ற நிலையில் தெளிவான– உறுதியான நிலையில் பயணிக்கிறார்.
தனது கட்சியைச் சேர்ந்தோராகட்டும் அல்லது தன்னை அரச தலைவராக்கி அழகுபார்த்த ஐ.தே. கட்சியைச் சேர்ந்தோராகட்டும் ‘‘நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே’’ என்று பக்கம் சாராது நடுநிலையாக அனைவரையும் நோக்குகின்றார்.
முக்கியமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீதான தென்பகுதி மக்களின் ஆதரவு சற்றும் குறையாத நிலையில் அவரது கூட்டங்களுக்கும் மக்கள் அணி திரளும் நிலையில், கூட ஐ.தே.கட்சியின் ஆதரவு முக்கியம் என்ற நிலையில் கூட ஊழல் முறைகேடுகள் விடயத்தில் எதற்கும் அஞ்சாது ‘‘சட்டத்தின் முன் அனைவரும் சமமே’’ என்ற தாற்பரியத்தில் ஜனாதிபதி மைத்திரிபால உறுதியாக உள்ளார்.
இந்த நிலையில், பிணைமுறி ஊழலில் சிக்கியுள்ள ஐ.தே.கட்சியோ அல்லது முன்னைய ஆட்சியாளர்களின் பல ஊழல் முறைகேடுகளின் விசாரணைகளால் தடுமாறும் பொது எதிரணியோ, இந்த விடயத்தில் தமது பொது எதிரியாக ஜனாதிபதி மைத்திரிபால அவர்களே கருதக் கூடும்.
இதுவே சாதாரண வேளை என்றால், பாதிப்பு, தாக்கம் சற்றுக்குறைவாக இருந்திருக்கக் கூடும். ஆனால் உள்ளூராட்சித் தேர்தல் வேளை என்பதால் பரபரப்புக்கும், ஒருவரை ஒருவர் காலை வாரி விடும் செயற்பாட்டுக்கும், பஞ்சமில்லை எனக் கொள்ள முடிகிறது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஐ.தே.கட்சியும் இணைந்து ஆட்சியை முன்னெடுத்துச் செல்வதாகக் கூறப்பட்டாலும் , சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பொது எதிரணி என்ற பெயரில் முன்னாள் ஜனாதிபதியின் தலைமையிலேயே செயற்பட்டு வருகின்றனர்.
53 உறுப்பினர்கள் பொது எதிரணித் தரப்பின் பக்கமும் 43 உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான கூட்டு அரசிலும் அங்கம் வகித்து வரும் நிலையில் கடந்த வாரம் ஜனாதிபதி வெளியிட்டதொரு அறிவிப்பு தென்னிலங்கையை மட்டுமன்றி முழு நாட்டையும் ஈடாட்டம் காணச் செய்து விட்டது.
96 சு.க. உறுப்பனர்களும் தன்னோடு ஒன்றிணைந்து செயற்பட்டால் நாளையே சுதந்திரக் கட்சியால் தனித்து ஆட்சி அமைக்க இயலும் என்ற அவரது அதிரடி அறிவிப்பு நாட்டைப் பரபரப்பின் விளிம்புக்கு இட்டுச் சென்றது.
ஏனெனில் கடந்த அமைச்சரவைக் கூட்ட மொன்றில் அரச தலைவரின் சீற்றமும் வெளிநடப்பும் ஐ.தே.க உறுப்பினர்களால் ஜனாதிபதி கடுமையாக சீண்டப்பட்டதன் எதிரொலியான செயற்பாடாக அமைந்தது.
இந்த நிலையில் விரும்பியோ விரும்பாமலோ சுதந்திரக் கட்சியும் ஐ.தே.கட்சியும் தமது தேனிலவின் பின்னரான திருமண பந்தத்தை 2020 வரை இறுகப் பற்றிப் பிடித்தே செயற்பட்டாக வேண்டியுள்ளது.
106 நாடாளுமன்ற உறுப்பினர்களை தன்வசம் கொண்டுள்ள ஐ.தே.கட்சிக் கூட்டணியில் மேலும் உறுப்பினர்களைச் சேர்த்துக் கொண்டு தனித்து ஆட்சியமைக்க ஐ.தே.கட்சிக்கு ஜே.வி.பி. அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு தேவை.
ஜே.வி.பி. ஆதரவு குறித்து நினைத்தும் பார்க்க இயலாது. கூட்டமைப்பு வெளியில் இருந்து ஐ.தே.கட்சியை ஆதரிக்கக் கூடும்.
இந்த நிலையில் ஜனாதிபதியின் 96 உறுப்பினர்களுடன் தனித்து சுதந்திரக் கட்சி ஆட்சி அமைக்கும் கனவு எப்படிச் சாத்தியமாகும்?
அதிரடி ஆட்டம் தொடருமா?
ஆனாலும் அடுத்த சில நாள்களிலேயே ஜனாதிபதி அது கூட்டு எதிரணியின் 53 நாடாளுமன்ற உறுப்பினர் சகலருக்குமான அழைப்பல்ல எனக் கூறி தமது கருத்து வெளிப்பாட்டினின்றும் பின் வாங்கிவிட்டார்.
அதற்குள் ஜனாதிபதி தனிமையாகிவிட்டார் அரசியல் அநாதையாகிவிட்டார். தோற்றுவிட்டார் என பல கேலிப் பேச்சுக்களும் கிளம்பின.
கிரிக்கெட் ஆட்டத்தில் தங்கள் தரபபு வெற்றி பெறுவதற்கு எண்ணிக்கை குறைவான பந்து வீச்சுகளும், ஆட்டமிழக்காது அதிக ஆட்டக்காரர்களும் இருந்தால் ஆட்டக்காரர்கள் துணிந்து அடித்து ஆடுவது போல,
ஜனாதிபதியும் மூன்றாண்டுகள் கழித்து எஞ்சிய தனது பதவிக்காலத்தில் இலங்கை அரசியலை ஒரு கை பார்த்து விடத் துணிந்து விட்டார் போல தெரிகிறது.
உள்ளூராட்சித் தேர்தல் பரபரப்பை விட ஜனாதிபதியினது அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைள் சகலரையும் வியப்படைய வைத்து வருகின்றன. அந்த வகையில் அதிரடி ஆட்டம் தொடரும் என நம்பலாம்.






