நாடு சுதந்திரமடைந்தும் முழுமை பெறாத சுதந்திரம்!

நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளை நிறைவு செய்வதற்கு இன்னுமிருப்பது ஐந்து நாட்கள் மட்டுமேயாகும். இந்தத் தருணத்தில் கடந்த 7 தசாப்த கால பகுதியை பின்நோக்கிப் பார்ப்போமானால் கடந்து வந்த பாதை நினைக்குமளவுக்கு மனநிறைவுகள் என்பது இயலாத காரியமாகும்.

ஏனெனில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே எமது நாட்டில் மக்களிடையே நல்லிணக்கம் காணப்படவில்லை. இன முரண்பாடும், மத வேறுபாடும் ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தலை விரித்தாடியது என்பது கசப்பான உண்மையாகும். காலத்துக்குக் காலம் இந்த முரண்பாடுகளும், வேறுபாடுகளும் ஏற்ற இறக்கத்தோடு தொடர்ந்த வண்ணமே உள்ளது.

இலங்கையில் பௌத்த மேலாதிக்கம் சிறுபான்மைச் சமூகங்களை அடிமைப்படுத்துகின்ற போக்கே காணப்படுகிறது. இங்கு பல்லின மக்கள் வாழுகின்ற போதும் சிங்கள பௌத்த நாடு என்ற குரல்தான் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அன்று 1948 பெப்ரவரி 4ம் திகதி எமக்கு சுதந்திரம் கிடைத்த போது முதலாவது பிரதமராக பதவியேற்ற தேச பிதா டி.எஸ். சேனாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய முதலாவது சுதந்திர தின உரையின் போது தெரிவித்த கருத்துக்களை நாம் மீட்டிப் பார்க்க வேண்டியுள்ளது.

இந்த நாட்டில் வாழும் சகல இன மக்களும் சகோதரர்கள் இலங்கையர்களாவர். சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற வேறுபாடு இருக்கக் கூடாது. எல்லோரும் ஒன்றுபட்டுத்தான் சுதந்திரத்தை வென்றெடுத்துள்ளோம். தேசத்தின் உயர்வுக்காக இவர்கள் அனைவருமே வியர்வை சிந்தியுள்ளனர்.இப்படி அவரது உரை தொடர்கிறது.

டி.எஸ். ஸுடன் இணைந்து அரசியலில் ஈடுபட்ட தலைவர்களில் ஒரு சிலரைத் தவிர எல்லோரும் போல் இன ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமாகவே குரல் கொடுத்து வந்தனர். இன்றும் கூட அந்த நிலை காணப்படுகிறது.

அதே சமயம் தேசிய அரசியல் கட்சிகளில் அங்கம் வகிக்கும் குறிப்பிடத்தக்கவர்கள் இன்னமும் கூட இனவாதச் சிந்தனையுடன் செயற்படுவதை அவதானிக்க முடிகிறது. ஐக்கிய தேசியக் கட்சியிலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும் கூட இவ்வாறான இனவாதச் சிந்தனை கொண்டவர்கள் காணப்படவே செய்தது. இதனை எவராலும் மறுத்துரைக்க முடியாது.

இவர்களின் வழித்தோன்றல்களாக இன்று பலரையும் காணக்கூடியதாக உள்ளது. சிலர் வெளிப்படையாகச் செயற்படும் அதே சமயம் பலர் மறைமுகமாக தமது செயற்பாடுகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர். கடந்த ஆட்சியில் இவர்களது செயற்பாடுகள் தலைவிரித்தாடியது.

பௌத்த தர்மத்தை மீறும் வகையில் அன்றும் இன்றும் பல மகாசங்கத்தைச் சேர்ந்தவர்களும் இனவாதத்தை தமது கைகளில் எடுத்துச் செயற்பட்டனர். செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.ஒரு கால கட்டத்தில் அநகாரிக தர்மபால போன்றோர் தூய பௌத்தன் என்ற போர்வையில் இனவாதியாகவே செயற்பட்டமை வரலாற்றுப் பதிவாகும்.

ஆரம்பத்தில் வெள்ளைக்கார அடிமைத்தனத்தை எதிர்த்து தேசிய இயக்கத்தை ஆரம்பித்த அவர் பிற்பட்ட காலத்தில் உள்ளூரிலேயே தனது இனவாதச் செயற்பாடுகளை கட்டவிழ்த்து விட்டார். இப்படி வளர்ந்த இனவாதச் செயற்பாடு அண்மைக் காலத்தில் கொழுந்து விட்டெரியும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

நாட்டின் சுதந்திரப் பிரகடனத்தில் சகல இனத்தவர்களும் ஒரு குடும்பமாக குறிப்பிடப்பட்டிருக்கின்ற போதும் பெரும்பான்மைச் சமூகத்தினர்கள் அவர்களது தலைவர்களால் தவறாக வழிநடத்தப்பட்டதன் காரணமாகவே இனவாதம் தலைவிரித்தாடியது.

எமது நாட்டின் அரசியலமைப்பில் சகல இனத்தவர்களுக்கு சமமான உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஜனநாயக ரீதியில் அனைவரும் இலங்கையர்கள் என்ற கோட்பாடே வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் இனவாதத் தீயை வளர்த்தெடுக்கும் தவறான அரசியல் கலாசாரம் காரணமாக 70 வருடங்களுக்கு முன்னர் பெற்றுக் கொண்ட சுதந்திரமானது அர்த்தமற்றதொன்றாகவே நோக்கப்பட வேண்டியுள்ளது. இன்றும் கூட சில அரசியல்வாதிகள் வெளிப்படுத்தும் வார்த்தைகள் இனவாதத்துக்கு தூபமிடுவதாகவே காணமுடிகிறது.

நல்லிணக்கம், சகவாழ்வு பற்றியெல்லாம் பெரிதாகப் பேசிக் கொண்டிருக்கின்றோம். நல்லிணக்க மாநாடுகளும், சமாதான சகவாழ்வுக் கருத்தாடல்களும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற போதும் மற்றொரு திசையில் இனவாதத்தீயும் பரவிக் கொண்டு தானிருக்கின்றது.

பௌத்த சிங்கள மக்களை சிறுபான்மை சமுகங்களுக்கு எதிராகத் தூண்டி அதன் மூலம் சுய அரசியல் இலாபம் தேடும் முயற்சிகள் அன்றுபோல் இன்றும் நடந்து கொண்டுதானிருக்கின்றது. தமது அரசியல் நலன்களுக்காக அப்பாவி மக்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்தும் இந்த ஒழுக்கச் சீர்கேட்டை தடுத்து நிறுத்த முடியாததொரு அவலம் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றது.

இந்தப் பேரழிவிலிருந்து எமது நாட்டை மீட்டெடுக்க வேண்டிய அவசரம் இன்று ஏற்பட்டுள்ளது. எதிர்ப்புப் பிரசாரம் என்ற ஆயுதத்தை விட இதனை இணைத்து செயற்படுவதன் மூலம், அந்நியோன்ய உறவு மூலமே வெற்றி கொள்ள முடியும். 70 ஆண்டுகளாக ஒற்றுமைக்கான குரலைத்தான் கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.

சுதந்திரத்தின் உண்மையான யதார்த்தத்தை அனைத்து இன மக்களும் உணரச் செய்ய வேண்டும்.இந்த விடயத்தில் நாம் இனம், மதம், மொழி, அரசியல் பேதங்கள் கடந்து சிந்திக்க வேண்டும்.

அடுத்த வாரத்தில் தொடங்கும் 71 ஆவது சுதந்திர தினத்தில் காலடி வைக்கும்போது ஒவ்வொருவரதும் உள்ளங்கள் ஒன்றுபட்டதாக அமைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.