பீப்பாயுடன் பெண்ணுடலை ஒப்பிட்டு கோபத்தை சம்பாதித்த விளம்பரம்!

இலங்கை தலைநகர் கொழும்புவிலுள்ள ஒரு உடற்பயிற்சி கூடம், பெரிய அளவிலான விளம்பர பேனரில் பீப்பாயை வைத்ததுடன், “இது ஒரு பெண்ணிற்கான வடிவம் அல்ல” என்ற வாசகத்தையும் கொண்டிருந்ததால் அந்நாட்டிலுள்ள பெண்களிடையே கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது.

கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள ஓஸ்மோ என்ற அந்த உடற்பயிற்சி கூடம் கடந்த வாரம் வைத்த இந்த சர்ச்சைக்குரிய பதாகையால் சமூக வலைதளங்களில் இதுகுறித்து பரவலாக பேசப்பட்டது.

“உடலமைப்பையும், பாலியலையும் வெளிப்படையாக இழிவுப்படுத்தும்” பதாகை குறித்த தங்களது கருத்துக்களை ஆண்களும், பெண்களும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.

625.0.560.320.160.600.053.800.700.160.90 (2)மேலும், சிலர் அந்த விளம்பரத்தை வைத்த நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக #BoycottOsmo என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தியும், ஃபேஸ்புக்கில் உடற்பயிற்சி கூடத்தின் பக்கத்தை குறிப்பிட்டு அந்த விளம்பர பலகையை அகற்றுமாறும், செயலுக்கு மன்னிப்பு கேட்குமாறும் பதிவிட்டனர்.

ஆனால், இதுகுறித்து எவ்வித கருத்தையும் தெரிவிக்காத அந்த உடற்பயிற்சி கூடம், பாதாகையில் பயன்படுத்தப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய புகைப்படங்களை தனது ஃபேஸ்புக் பக்கத்திலிருந்தும் நீக்கவில்லை.

“பெண்களின் உடலை பாலியல் ரீதியாக உருவகப்படுத்தி கார் முதல் வாசனை திரவியங்கள் வரை அனைத்தையும் விற்பனை செய்யும் விளம்பர துறையின் பெண்களுக்கெதிரான செயல்பாடுகளில் ஒன்றாகவே இதுவும் உள்ளது” என்று பிபிசியிடம் பேசிய செயற்பாட்டாளரான மரிசா டி செல்வா கூறுகிறார்.

625.0.560.320.160.600.053.800.700.160.90 (3)இந்த விடயம் குறித்து அந்த உடற்பயிற்சி கூடத்தின் விற்பனை பிரிவு பிரதிநிதியை தொடர்பு கொண்டபோது, அந்த பதாகை நிறுவனத்தின் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டது என்று கூறினார். மேலும், பேனரை அவ்விடத்திலிருந்து நீக்குவதற்குரிய உறுதி மொழியையும் அளிக்கவில்லை.

இதுகுறித்து அமைச்சர் ஹர்ஷா டி செல்வாவிடம் சிலர் முறையிட்டதால், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அனுமதி பெறாமலும், மனதை புண்பட வைக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகையை அகற்றுமாறு கொழும்பு மாநகர ஆணையரை கேட்டுக்கொண்டுள்ளேன். இதுபோன்று கோட்டேவில் நடப்பதை என்னால் ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது” என்று பதிவிட்டுள்ளார்.

அதைத்தொடர்ந்து, உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள பதாகையை நீக்கிய மாநகராட்சி அதிகாரிகள், இந்த புகாரை முன்னெடுத்த பெண்ணை அந்த இடத்தில் பாலியல் ரீதியான கொச்சைப்படுத்துதலுக்கு எதிரான வாசகத்தை இரண்டு நாட்களுக்கு வைப்பதற்கு அனுமதியளித்தது.

“மாதர்தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என்ற வாசகத்துடன் வைக்கப்பட்ட அந்த பதாகை ஒரே நாளில் மாயமாகிவிட்டது.

இந்நிலையில், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ள உடற்பயிற்சி கூடம், தாங்கள் அந்த விளம்பர பேனரை ‘திரும்பப்பெற்றுவிட்டதாகவும்”, “ஒரு குறிப்பிட்ட பெண்ணையோ அல்லது பொதுவாக பெண் சமுதாயத்தையோ அவமதிக்கும், இழிவுபடுத்தும் அல்லது குறைவாக மதிப்பிடும் எண்ணத்தில் இதை செய்யவில்லை” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஆண்களைவிட பெண்களிடையே உடல்ரீதியான செயல்பாடு குறைந்தும், சர்க்கரை நோய், உடல்பருமன் போன்றவை அதிகரித்தும் காணப்படுவதாக கூறும் உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றினால்தான் இதுபோன்ற விளம்பர பதாகையை வைத்ததாக அந்த உடற்பயிற்சி கூடம் மேலும் கூறியுள்ளது.