திருப்பூரை சேர்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அவரை அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் 2 வாலிபர்கள் பள்ளி செல்லும் போது கேலி கிண்டல் செய்து வந்துள்ளனர். இதனால் மாணவி கடந்த 3 மாதமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று மாணவி அப்பகுதியில் உள்ள பொது கழிப்பிடத்துக்கு சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 17 வயது சிறுவன் மற்றும் 2 வாலிபர்களும் சேர்ந்து கிண்டல் செய்துள்ளனர்.
பின்னர் குளிர்பான பாட்டிலை கொடுத்து குடிக்குமாறு வற்புறுத்தி இருக்கிறார்கள். மாணவி அதை குடித்தபோது அது குளிர்பானம் அல்ல. மது என்பது தெரிய வந்தது. குளிர்பானத்தில் மதுவை கலந்து அவர்கள் கொடுத்துள்ளனர்.
உடனே மாணவி சத்தம் போட்டு அலறினார். அப்போது 3 பேரும் மாணவியின் ஆடையை பிடித்து இழுத்துள்ளனர். அவர்களிடமிருந்து தப்பி வந்த மாணவி அழுதபடி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தார். இது குறித்து விசாரிக்க பெற்றோர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த சாணிப்பவுடரை தண்ணீரில் கரைத்து குடித்து மாணவி தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த பெற்றோர் மாணவியை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இது தொடர்பாக சிறுமியின் தாயார் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் ஈவ் டீசிங், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்து 17 வயது சிறுவனை கைது செய்தனர்.தலைமறைவாக உள்ள வாலிபர்கள் 2 பேரை தேடி வருகிறார்கள்.