“திருமணம் நல்லபடியா முடிஞ்சாச்சு. புகுந்த வீட்டுக்குப் போய் நல்லபடியா நடந்து நம்ம குடும்பத்துப் பேரை காப்பாத்து. கல்யாணப் பொண்ணே, எங்க கண்ணையே உன் கையில் ஒப்படைக்கிறோம். அவனை கண் கலங்காம பார்த்துக்க” – இப்படியொரு டயலாக் மணப்பெண்ணின் காதுகளில் விழுந்தால், இன்ப ஃபலூடா ஐஸ்கிரீம் வந்து காதுகளில் வீழ்ந்ததுபோல இருக்குமல்லவா? மற்ற பெண்களுக்கு வாய்ப்பில்லை என்றாலும், தமிழ்நாட்டில் சில பகுதிகளில் வசிக்கும் பெண்களுக்கு நிச்சயம் இப்படி காதுகளில் ஐஸ்கிரீம் பாய நிச்சயம் வாய்ப்பிருக்கிறது.
பொதுவாக திருமணமாகி புகுந்த வீட்டுக்குக் கிளம்பும் எல்லாப் பெண்களின் மனதிலும், ‘பொறந்து வளர்ந்த வீட்டைவிட்டு பொம்பளைங்கதான் புருஷன் வீட்டுக்குப் போகணுமா? அதுக்குப் பதில் அவங்க நம்ம வீட்டுக்கு வந்தா என்னவாம்” என்கிற கேள்வியும் ஏக்கமும் நிச்சயம் வந்துபோகும். இதெல்லாம் சினிமா நகைச்சுவை காட்சியில் வேண்டுமானால் நடக்கலாம் என்றுதானே நினைக்கிறீர்கள். இல்லை, நிஜமாகவே, திருமணம் முடிந்து, மனைவியின் வீட்டுடன் கணவன் செல்லும் வழக்கம் தமிழ்நாட்டில் இருக்கிறது தெரியுமா? காயல்பட்டினம், கீழக்கரை, தொண்டி போன்ற பகுதிகளில் இருக்கும் இஸ்லாமிய குடும்பங்களில்தான் இப்படி ஒரு வழக்கம் இருக்கிறது. இது பற்றி கீழக்கரையைச் சேர்ந்த அமீனா என்ற குடும்பத்தலைவி சொல்வதைக் கேளுங்களேன்.
“இந்த வழக்கத்துக்குப் பின்னால கதை ஒண்ணு இருக்கு. சுமார் முந்நூறு, நானூறு வருஷங்களுக்கு முன்னாடி நடந்த ஒரு நிஜக் கதை அது. சதகத்துல்லா என்கிற ஊர் பெரியவர், தன் மகளை நிக்ஹா செய்துகொடுத்தார். அந்தக் காலத்தில், இப்ப மாதிரி வண்டி வசதியெல்லாம் கிடையாதுங்கிறதால ஒரு கிராமத்திலிருந்து அடுத்த கிராமத்துக்கு நடந்ததேதான் போவாங்க. அப்படியே நடந்து பொண்ணைக் கட்டிக் கொடுத்தவங்க சம்பந்தி வீட்டுக்குப் போனாலும், அவங்க மகளைப் பார்க்கிறதுக்காக அடிக்கடி வர்றதை பையன் வீட்டில் விரும்ப மாட்டாங்க. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், பெரியவர் சதகத்துல்லா ஒருநாள் நடந்தே மகளின் கிராமத்துக்குப் போய் சேருகிறார். அங்கே மகள் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறாள். அவளிடம் நலம் விசாரிக்க, ‘உள்ளங்கை புண் மாதிரி இருக்கேன் வாப்பா’னு சொல்லுது பொண்ணு. அவருக்குச் சரியாப் புரியலை. மகளைப் பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்பிடறார் பெரியவர் சதகத்துல்லா. வந்த ஒரு வாரத்தில் அவர் உள்ளங்கையில் புண் வந்துடுது. எந்த வேலையையும் செய்யமுடியாம தவிக்கிறார். அப்போதான் மகள் சொன்னதன் அர்த்தமும் அவளுடைய வலியும் புரியுது. உடனே ஊரைக் கூட்டி, ‘இனிமே நம்ம ஊரில் நிக்ஹா முடிஞ்சு மணமகன்தான் பெண் வீட்டுடோடு இருக்கணும்’னு சொல்றார். அதுக்கு ஊர்மக்களும் சம்மதிக்கிறாங்க. அந்த வழக்கத்தையே காயல்பட்டினம், கீழக்கரை, தொண்டி போன்ற பகுதிகளில் வாழும் வம்சாவழியினரான நாங்க கடைப்பிடிச்சு வரோம்” என்கிறார்.
இவர்கள் வழக்கப்படி வீட்டையும் பரம்பரை பரம்பரையாகப் பெண்ணுக்கே கொடுக்கிறார்கள். “பெண் நம் வீட்டிலே இருக்கிறதால் வரதட்சணைக் கொடுமை கிடையாது. எங்கள் வீட்டுப் பையன்கள் நிக்ஹா முடிஞ்சு அவர்களின் மனைவி வீட்டுக்குப் போயிடுவாங்க. சில மாப்பிள்ளைகள், அவங்களே நிக்ஹா செய்துக்கிட்டு தனி வீடு எடுத்து மனைவியுடன் இருப்பாங்க. மொத்தத்தில் எங்க குடும்பத்துப் பெண்கள் நிக்ஹா முடிஞ்சாலும் அம்மா வீட்டிலேயே இருப்பாங்க” என்கிற அமீனா குரலில் மகிழ்ச்சி பொங்குகிறது.