வங்கதேசம் அதிரடி.. இலங்கையை 163 ரன் வித்தியாசத்தில் சாய்த்து வரலாறு!
மிர்பூர்: இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் வங்கதேச கிரிக்கெட் அணி 163 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது.
வங்கதேச அணி தனது ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் மிகப் பெரிய அளவிலான வித்தியாசத்தில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும்.
வங்கதேசத்தில் 3 நாடுகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது.
இலங்கை, வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் இதில் கலந்து கொண்டுள்ளன. இதில் இன்று நடந்த போட்டியில் இலங்கையும், வங்கதேசமும் மோதின.
இப்போட்டியில்தான் அதிரடி வெற்றியைப் பெற்றது வங்கதேசம். வங்கதேச தொடக்க ஆட்டக்காரர் தமீம் இக்பால் 84 ரன்களைக் குவித்தார்.
,ஷாகிப் அல் ஹசன் 67, முஷ்பிகர் ரஹ்மான் 62 ரன்களைக் குவித்தனர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் வங்கதேச அணி 7 விக்கெட் இழப்புக்கு 320 ரன்களைக் குவித்தது.
பின்னர் ஆட வந்த இலங்கை அணி 32.2 ஓவர்களிலேயே சுருண்டு போனது. அந்த அணி 157 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
இலங்கை அணி சமீப காலமாக பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது. கடைசியாக ஆடிய 17 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே அது வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.