குளிர்ந்து கிடக்கும் அலைகடல் ஏன் அக்னித் தீர்த்தம் என்றானது?

அலைகளோ சூடோ இல்லாத ராமேஸ்வரக் கடலை அக்னித் தீர்த்தம் என்று ஏன் அழைக்கிறோம்? எப்போதும் குளிர்ச்சியாக ராமநாதப்பெருமானை தரிசித்தவாறு அகன்று விரிந்திருக்கும் ராமேஸ்வரக் கடல் அன்னை சீதாவால் தான் அக்னித் தீர்த்தம் என்று பெயரைப் பெற்றுக்கொண்டது. ராவண வதம் முடிந்ததும், ஸ்ரீராமர் உலகில் உள்ளோர் அபவாதம் பேசக்கூடாது என்று எண்ணி, அன்னை சீதாவை அக்னிப் பிரவேசம் செய்யச் சொன்னார். இதனால் தனது புகழுக்கு பெருமையே என்று எண்ணி அன்னையும் லட்சுமணனை தீ மூட்டச் சொன்னார். லட்சுமணன் மறுக்கவே, ‘தாய் சுமித்திரை சொன்னது மறந்தாயா! தாயைப்போல என்னைக் காக்க வேண்டுமென்று உன் தாயே அயோத்தியில் சொன்னதை மறந்தாயா?’ என்று கேட்கவும் தீ மூட்டினார் இளையபெருமாள்.

ஸ்ரீராமர்

தகதகவென பற்றிய தீயில் அன்னை ஜானகி இறங்கினார். திருமகளின் தீண்டலை உணர்ந்த அக்னி பகவான் ஒரு மழலையைப்போல மனம் குளிர்ந்தான். அன்னையின் ஸ்பரிசத்தால் மகிழ்ந்த காரணத்தால் அக்னி  வெப்பம் தணிந்து குளிரானது. ஜானகியை ஸ்ரீராமரிடம் ஒப்படைத்த அக்னி பகவான், அப்பழுக்கற்ற அன்னையின் தீண்டலால் நான் குளிர்ந்து போனேன். இவரை எரிக்கும் ஆற்றல் யாருக்குமே இல்லை என்று கூறி  வணங்கினான்.

அக்னித் தீர்த்தம்

அன்னை வைதேகி தீக்குளித்த கடற்கரையிலே அக்னி பகவான் நீராடி மீண்டும் தனது வெப்பத்தைப் பெற்றான். அக்னி நீராடிய தீர்த்தம் அவன் பெயராலேயே இன்றும் அக்னித் தீர்த்தம் என்று புனிதம் கொண்டிருக்கிறது. அன்னை சீதாதேவி அக்னியில் நீராடி தன்னை பெருமைப்படுத்திக் கொண்டதைப்போல, இங்கே குவியும் பக்தர்களும் அக்னி தீர்த்தத்தில் நீராடி, தங்கள் பாவங்களை நீக்கிக்கொள்கிறார்கள் என்று ஆன்மிகப்பெரியோர்கள் தெரிவிக்கிறார்கள்.