தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தான் அரசியலில் பிரவேசிக்கப் போவதாகவும், புதிதாக ஓர் அரசியல் கட்சியினை துவக்கி வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் தமிழகத்திலுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக கடந்த ஆண்டு நடைபெற்ற தனது ரசிகர்கள் சந்திப்பு நிகழ்வின் போது அறிவித்தார்.

ரஜினியின் அறிவிப்பினை தொடர்ந்து அவரது அரசியல் வருகையை ஆதரித்தும், எதிர்த்தும் அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்தினை பதிவு செய்து வருகின்றனர். மேலும், அவர் ஆன்மீக அரசியலில் ஈடுபட போவதாக தெரிவித்ததும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
இந்நிலையில், நேற்று கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கலைஞரை சந்தித்து வாழ்த்து பெற்று சென்றார் நடிகர் ரஜினி. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின், “நடிகர் ரஜினியை பயன்படுத்தி தமிழகத்தில் மத ரீதியிலான அரசியலை முன்னெடுத்து விடலாம் என கருதுகிற சக்திகளுக்கு ஒன்றை மட்டும் கூறிக்கொள்கிறேன். இது பெரியார் மண், பேரறிஞர் அண்ணா – கலைஞர் ஆகியோர் பண்படுத்திய மண். இங்கு ஒருபோதும் மத ரீதியிலான அரசியலுக்கு இடமில்லை” என தெரிவித்தார்.






