நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தி.மு.க தலைவர் கருணாநிதி ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் வரையில் நீடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த 31ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக ஆதரவாளர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இதற்காக இணையம் மற்றும் செயலி என்பனவும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்றைய தினம் தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது ரஜினியின் முதல் அரசியல் கட்சி தலைவரின் சந்திப்பாக அமைந்துள்ளது.
சென்னை கோபாலபுரத்தில் வைத்து ரஜினிகாந்த் கருணாநிதியை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது தி.மு.கவின் செயல்தலைவர் ஸ்டாலினும் உடனிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக நடிகர் ரஜினியின் அரசியல் அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு தரப்பினர்களும் வரவேற்பு தெரிவித்திருந்ததுடன், அதற்கு இணையாக எதிர்ப்புகளும் வெளியிடப்பட்டிருந்தன.
நடிகர் ரஜினிகாந்த் கருணாநிதியை சந்திக்கவுள்ளார் என செய்திகள் வெளியானதும், ரஜினி கருணாநிதியோடு கூட்டு சேரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், சந்திப்பின் பின்னர் அதனை நடிகர் ரஜினிகாந்த் முற்றாக மறுத்திருந்தார். கருணாநிதியை சந்தித்து பேசிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“கருணாநிதியை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தேன். அவருடைய உடல்நலனை கேட்டறிந்தேன், என்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து அவரிடம் கூறி ஆசி பெற்றேன்.
தி.மு.க தலைவர் கருணாநிதி என்னுடைய நண்பர். அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளேன் என ரஜினிகாந்த் மேலும் தெரிவித்துள்ளார்.