குல்பூஷண் ஜாதவ் மரண தண்டனையை எதிர்த்து சர்வதேச கோர்ட்டில் இந்தியா முறையிட்டது. அதைத் தொடர்ந்து, அவருடைய மரண தண்டனையை நிறைவேற்ற சர்வதேச கோர்ட்டு தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குல்பூஷண் ஜாதவை இந்தியாவில் உள்ள அவரது தாயாரும், மனைவியும் சந்திக்க விரும்பினர்.
இவ்விவகாரம் தொடர்பாக இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, குல்பூஷண் ஜாதவை அவரது தாயார் அவந்தி மற்றும் மனைவி சேத்தன்குல் சந்தித்துப் பேசுவதற்கு பாகிஸ்தான் விசா வழங்கியது.
குல்பூஷண் ஜாதவின் வாக்குமூலம் என ஏற்கனவே பாகிஸ்தான் வெளியிட்ட வீடியோவையும், இப்போது வெளியிட்ட புகைப்படத்தையும் ஒப்பிட்டு பார்க்கையில் அவருடைய காது மடல் மாயமாகி உள்ளது தெரியவந்து உள்ளது.
அவருடைய தலை மற்றும் கழுத்து பகுதியில் காயம் இருந்து உள்ளது. இது அவர் சிறையில் சித்தரவதை செய்யப்படுகிறார் என்பதை உறுதி செய்யும் வகையில் உள்ளது.
இதற்கிடையே குல்பூஷண் ஜாதவை அவருடைய தாய் மற்றும் மனைவி சந்திப்பதற்கு முன்னதாக ஜெர்மனி நாட்டை சேர்ந்த மருத்துவர் பரிசோதனை செய்து உள்ளார்.
துபாய் மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவருக்கு அழைப்பு விடுத்து உள்ள பாகிஸ்தான், அவரை அழைத்து வந்து பரிசோதனையை மேற்கொண்டு உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆனால் வெளிநாட்டு டாக்டரிடம் நோயாளி யார் என தெரிவிக்கப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. விஐபி என கூறி பாகிஸ்தான் அவரை அங்கு அழைத்து சென்று உள்ளது என முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
பரிசோதனை செய்த டாக்டரின் ஒப்புதல் எதுவுமின்றி பாகிஸ்தான் மருத்துவ அறிக்கை என ஒன்றை வெளியிட்டு உள்ளது.