வில்பத்து வனம் அழிக்கப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதி பதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை வெளிவந்துள்ள நிலையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தனது கெளரவத்தை தக்கவைத்துக் கொண்டு உடன் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்.
இல்லையேல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நிறைவேற்று அதிகாரத்தை பிரயோகித்து அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கோரிக்கை விடுத்தார்.
வீடமைப்பு அமைச்சும் இன ரீதியாக பிளவுப்படுத்தப்பட்டுள்ளது. எங்களுடைய பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு.
இனிமேல் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தனது ஆட்டத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும். மேலும் பிரபாகரன் ஒருபோதும் சுற்று சூழலை நாசம் செய்யவில்லை.
அவரிடம் சிறந்த ஆளுமையும் தலைமைத்துவமும் இருந்தது. எனினும் அவரது அணுகுமுறையே தவறாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இராஜகிரியவில் அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
வில்பத்து பிரச்சினையை நாட்டுக்கு அம்பலப்படுத்தியது பொதுபல சேனாவாகும். ஆனால் அப்போது அமைதியாக இருந்த ஒரு சில அமைப்பினரும் பிக்குகளும் தற்போது அவர்களின் திறமையினால் விடயம் அம்பலமானதைப்போன்று காண்பிக்க முனைகின்றனர். அப்போது அமைதி காத்தவர்கள் தற்போது வீரவசனம் பேசுகின்றனர். எனினும் இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட வேண்டும்.
இந்த பிரச்சினை ஆரம்பத்தில் வந்த போது நாம் ராஜபக்ஷ அரசாங்கத்திடம் கூறினோம். எனினும் ரிஷாத் பதியுதீனை பஷில் ராஜபக்ஷவே முழுமையாக பாதுகாத்தார்.
இது தொடர்பாக பஷில் ராஜபக்ஷவிடம் கூறிய போது அவர் உங்களுக்கு அரசியல் தெரியாது என்று எம்மை திட்டி தீர்த்தார்.
அதேபோன்று அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவிடம் பிரச்சினையை எடுத்துரைத்தோம். அவர் பஷில் ராஜபக்ஷவே அதற்கு பொறுப்பாக இருப்பதாக கூறினார்.
எனவே முன்னைய ஆட்சியின் போதே இந்த பிரச்சினைக்கு வித்திடப்பட்டது. எனினும் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் எமது பிரச்சினையை கூறினோம்.
அதன்போது அவர் தலையிட்டு கணக்காய்வாளர் தலைமையில் குழுவொன்றையும் நியமித்தார். அதேபோன்று இராணுவ பாதுகாப்பையும் வழங்கினார். எனினும் அது எமக்கு போதாது.
தற்போது ரிஷாத் பதியுதீனின் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. அவர் அரசியலுக்கு வந்தது தொடக்கம் தற்போது வரைக்கும் அவரது வாழ்க்கையின் முன்னேற்றத்தை பார்த்தால் வியப்பாக உள்ளது.
எங்கிருந்து இவருக்கு பணம் வந்தது. தற்போது ஊடக நிறுவனமொன்றையும் ஆரம்பித்துள்ளார். அங்குள்ள தமிழ் மக்களை அடக்கி ஆளுகின்றார். இந்த அளவுக்கு யார் இவருக்கு அதிகாரம் கொடுத்தது. தமிழ், சிங்கள மொழியை விட்டு அரபு மொழியை வளர்கின்றார்.
எனினும் தற்போது அவருக்கு எதிராக பலர் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். குறிப்பாக முஸ்லிம்களே அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
அவர் தற்போது மூவாயிரம் ஏக்கருக்கு சொந்த காரராக உள்ளார். எமது சிங்கள தலைவர்களும் அவரை பாதுகாத்து வருகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்ததாக ஆட்சி அமைத்தால் அதிலும் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சராகவே அவர் இருப்பார். அந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்துகின்றார்.
நாட்டின் சுற்று சூழலை பாதுகாப்பது அவசியமாகும். ஜனாதிபதியும் இதனை கூறியுள்ளார். அப்படியாயின் ஏன் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
வேலுபிள்ளை பிரபாகரன் சுற்று சூழலை சரிவர பாதுகாத்தார். அவரது தலைமைத்துவம் சிறப்பாக இருந்தது. அவருக்கு ஆளுமை இருந்தது. எனினும் அவரது அணுகுமுறையே தவறாகும்.
ஆரம்பித்தில் அப்பகுதியில் 44 குடும்பங்களே வாழ்ந்தனர். ஆனால் தற்போது 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றனர். இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும். அதனை நாம் தவறு என்று கூறவில்லை.
ஆனால் அதில் ஒரு நியாய தன்மை அவசியமாகும். இதன்படி வன பகுதிகளை சீரழிக்காமல் மாடி வீடுகளை நிர்மாணித்து அவர்களது பிரச்சினைகளை தீர்க்க முடியும். அதுவே எமது யோசனையாகும்.
நாங்கள் பொறுத்தது போதும். எமது பொறுமைக்கு எல்லையுண்டு. இனிமேல் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தனது ஆட்டத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும். மாடி வீடுகள் அமைத்து வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்தால் பிரச்சினையை இலகுவாக தீர்க்க முடியும். தற்போது ரிஷாத் பதியுதீன் ஒருபுறமும் டி.எம் சுவாமிநாதன் மறுபுறமும் வீடுகளை நிர்மாணிக்கின்றனர்.
வீடமைப்பு அமைச்சும் இன ரீதியாக பிளவுப்படுத்தப்பட்டுள்ளது. வீடமைப்பு துறைக்கு தேசிய கொள்கையொன்றை தயாரிக்க வேண்டும்.
வில்பத்து வனம் அழிக்கப்பட்டமை தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை வெளிவந்துள்ளது. இதில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் தவறுகள் எடுத்துகாட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தனது கெளரவத்தை தக்கவைத்து கொண்டு உடன் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும். இல்லையேல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரை பதவி விலக்க வேண்டும்.






