சிறிலங்கா மீதான கண்காணிப்பு அதிகரிக்கப்படும்!

சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தாவர உற்பத்திகளின் மீதான கண்காணிப்பு அதிகரிக்கப்படும் என்று ரஷ்யாவின், விவசாய மற்றும் விலக்குகள் கண்காணிப்பு அமைப்பான, Rosselkhoznadzor இன் தலைவர், சேர்ஜி டாங்க்வேர்ட் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் தேயிலை உள்ளிட்ட விவசாய விளைபொருட்கள் மீதான தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளமை தொடர்பாக, ரஷ்யாவின் ஸ்புட்னிக் நாளிதழுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“சிறிலங்காவில் இருந்து அனைத்து தாவர உற்பத்திகளையும் இறக்குமதி செய்வதற்கு கடந்த 18ஆம் நாளில் இருந்து Rosselkhoznadzor தடை விதித்திருந்தது.

சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தேயிலைப் பொதியில், தானியங்கள் மற்றும் விதைகளுக்கு ஆபத்தான பூச்சியினமான கப்ரா என்ற வண்டு, கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே, இந்த தடை விதிக்கப்பட்டது.

இந்தப் பூச்சி ரஷ்யாவுக்குள் நுழைந்தால், டசின்கணக்கான மில்லியன் டொலர் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து, சிறிலங்காவில் இருந்து எல்லா தாவர உற்பத்திகளையும் இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை, எதிர்வரும் 30ஆம் நாளில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளோம்.

சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எல்லா தாவர உற்பத்திகளின் மீதான கண்காணிப்பும் அதிகரிக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

1200px-Flag_of_Sri_Lanka.svg