என் வாழ்வில் நான் செய்த மிகப்பெரிய தவறு அதுதான்! – தஷ்வந்தின் தந்தை

சிறுமி ஹாசினி மற்றும் தாய் சரளவை கொலை செய்த தஷ்வந்தை, ஜாமீனில் வெளியே கொண்டு வந்தது தான் தன் வாழ்வில் செய்த மிகப் பெரிய தவறு என தஷ்வந்தின் தந்தை சேகர் தெரிவித்துள்ளார்.

tasvanth-accused-hasini-murder44-11-1512971784சென்னையில், கடந்த பிப்ரவரி மாதம் ஹாசினி என்னும் சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக தஷ்வந்த் என்னும் 23 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.

வழக்கு விசாரணையில் இருந்த நிலையில், தஷ்வந்தின் தந்தை சேகர் அவரை சமீபத்தில் ஜாமீனில் வெளியே எடுத்தார். ஆனால், ஜாமீனில் வெளி வந்த சில நாட்களிலேயே தனது தாய் சரளாவை கொன்றுவிட்டு, நகைகளை வீட்டிலிருந்து திருடிக் கொண்டு சென்றுள்ளார் தஷ்வந்த்.

இதனைத் தொடர்ந்து, மீண்டும் கைது செய்யப்பட்ட தஷ்வந்த், பொலிசில் இருந்து தப்பியோடினார். அதன் பின்னர், தேடுதல் வேட்டைக்கு பிறகு பொலிசார் தஷ்வந்தை கைது செய்தனர்.

இந்நிலையில், தஷ்வந்தின் தந்தை சேகர் கூறுகையில், ‘நான் எனது வாழ்வில் மிகப் பெரிய தவறு செய்து விட்டேன். சிறு வயது முதலே தஷ்வந்தின் நடவடிக்கைகளில் மாற்றம் இருந்ததை கவனித்து வந்தேன்.

அவன் தனிமையை விரும்புபவன் என்பதால், மென்மை குணம் கொண்டவனாக இருப்பான் என்று நினைத்திருந்தேன்.

ஆனால், இப்படி ஒரு கொடூரமான காரீயத்தை செய்வான் என நினைக்கவில்லை. அவனுக்கு மனரீதியாக ஏதோ பிரச்சனை உள்ளது என்று தெரிந்த பின், அவனை மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றோம்.

அவனை பரிசோதித்த மருத்துவர், மருந்துகளை கொடுத்துவிட்டு தினமும் கவுன்சிலிங்கிற்கு வர வேண்டும் என்று கூறினார். ஆனால், தஷ்வந்த் அந்த மருந்துகளை உட்கொள்ளாமலும், கவுன்சிலிங்கிற்கு செல்லாமலும் இருந்துள்ளான்.

ஒருமுறை இருசக்கர வாகன திருட்டிலும் ஈடுபட்டிருந்தான். மேலும், காதல் விவகாரத்திலும் ஈடுபட்டதால், அவனுக்காக நாங்கள் முதல் முறையாக காவல் நிலையம் சென்று வந்தோம்.

சிறுமியை அவன் கொலை செய்த அன்று, நாங்கள் உறவினர் ஒருவரின் விழாவிற்கு சென்றிருந்தோம். அன்று எங்களுடன் தஷ்வந்த் வரவில்லை. நாங்கள் கைப்பேசியில் அழைத்தபோது, பக்கத்து வீட்டு சிறுமியை காணவில்லை. அவளின் பெற்றோருடன் சேர்ந்து அவளை தேடுவதாக கூறினான்.

பின்னர், தாமதமாக விழாவில் எங்களுடன் கலந்து கொண்டான். விழா முடிந்து இரவு 10 மணிக்கு நாங்கள் வீடு திரும்பினோம். ஆனால், தஷ்வந்த் 11.30 மணிக்கு தான் வீட்டிற்கு வந்தான்.

அடுத்த நாள் அவன் வழக்கம் போல வேலைக்கு சென்றுவிட்டான். அதற்கு அடுத்த நாள் பொலிசார், எங்கள் வீட்டிற்கு வந்து, சிறுமி ஹாசினியை கொலை செய்ததாக அவனை கைது செய்தனர். சிசிடிவி வீடியோவில் அவன் பை ஒன்றை எடுத்து சென்றை எங்களிடம் காண்பித்தனர்.

ஆனால், அவன் இதனை மறுத்தான். வழக்கு நடந்தபோது. வழக்கறிஞரிடம், அவனை ஜாமீனில் எடுக்க நான் ஆலோசித்தேன். குண்டர் சட்டம், தஷ்வந்த் மீது பாய்வது தெரிந்து உடனடியாக அவனை ஜாமீனில் எடுக்க முயன்றேன்.

அதற்கு என் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், அவன் மீது உள்ள பாசத்தில் அவனை வெளியே கொண்டு வந்தேன்.

எனது இரண்டாவது மகன், தஷ்வந்த் ஒரு சைக்கோ என்று கூறினான். அதனால் நாங்கள் பதட்டத்துடனேயே இருந்தோம். நான் நினைத்தது போலவே அசம்பாவிதம் நடந்துவிட்டது.

என் மனைவியை அவன் கொன்றுவிட்டு, வீட்டில் இருந்த நகைகளுடன் தப்பிச் சென்ற விடயம் தெரிய வந்தது. அவன் மீது நான் வைத்திருந்த அனைத்து நம்பிக்கையும் போய்விட்டது. நான் எனது மனைவியையும், மகனையும் இழந்துவிட்டேன்.

அதன்பிறகு எனது வழக்கறிஞரிடம், எந்த விதத்திலும் தஷ்வந்த்துக்கு உதவக் கூடாது என்று கூறிவிட்டேன். தற்போது எனது இரண்டாவது மகன் என்னிடம் பேசுவதில்லை.

என்னைப் போல யாரும் உங்கள் குழந்தைகள் மீது கண்மூடித்தனமான அன்பை வைக்காதீர்கள். என் வாழ்வில், நான் செய்த மிகப் பெரிய தவறு தஷ்வந்தை ஜாமீனில் வெளியில் கொண்டு வந்தது தான்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்