செலவுகளை குறைத்தால் திட்டங்களை அங்கீகரிக்க கிரண் பேடி முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆளுனர் கிரண் பேடி புதுவையில் மேற்கொண்ட ஆய்வுகளில் முறைகேடுகளுக்கு இடம்கொடுக்காமல் நிதியை சிக்கனமாக செலவு செய்தால் அரச திட்டங்களை அங்கீகரிக்க முடிவுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் திருவண்டார்கோவில்,திருபுவனை ஆகிய பகுதிகளில் உள்ள ஏரியை தூர்வார வேண்டும். கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள தொகுப்பு வீடுகள் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளன.சன்னியாசிக்குப்பம் அரசு பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என திருபுவனை தொகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இதையொட்டி ஆய்வு பணிக்காக திருபுவனை தொகுதியான திருவண்டார்கோவிலுக்கு நேற்று கிரணபேடி சென்றுள்ளார்.
அதனைதொடர்ந்து திருவண்டார்கோவில் ஏரியை கிரண்பேடி பார்வையிட்டார்.அப்போது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ஏரியை தூர்வாரவும்,ஏரியை சுற்றி மரக்கன்றுகள் நடவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.கலிதீர்த்தாள்குப்பத்தில் தொகுப்பு வீடுகள் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் அந்த வீடுகளை கிரண்பேடி பார்வையிட்டார்.அங்கு முறைகேடுகள் நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் ஆதிதிராவிடர் நலத்துறையிடம் விளக்கம் கேட்கப்படும்.அந்த அறிக்கையின்படி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிரண்பேடி தெரிவித்தார்.
சன்னியாசிக்குப்பம் அரசு பள்ளிக்கு சென்று பார்வையிட்ட கிரண்பேடி அந்த பள்ளிக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவும்,சுற்றுசுவர் கட்டவும்,தொண்டு நிறுவனம் மூலம் மாணவர்களுக்கு கழிவறை வசதி செய்து தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுள்ளார். இதன்பின் ஆய்வை முடித்த கிரண் பேடி அரசு நிதி நெருக்கடியில் இருக்கிறது. முறைகேடுகள் இடம் கொடுக்காமலும்,நிதியை சிக்கனமாகவும் செலவழித்தால் அரசு திட்டங்களுக்கு அனுமதி அளிப்பேன் என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






